விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் போட்டியிடவுள்ள இரண்டு தொகுதிகளில் யார், எந்த சின்னத்தில் போட்டியிடவுள்ளார்கள் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தனித்தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிதம்பரத்தில் திருமாவளவன் தனிச்சின்னத்திலும், விழுப்புரத்தில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதை [ஒரு தொகுதி உதயசூரியன், ஒரு தொகுதி தனிச் சின்னம்: விசிக வித்தியாசத் திட்டம்!](https://www.minnambalam.com/k/2019/03/12/20) என்ற தலைப்பில் மார்ச் 12ஆம் தேதியே மின்னம்பலத்தில் தெரிவித்திருந்தோம். இன்று இதனை திருமாவளவன் உறுதிப்படுத்தியிருக்கிறார். சிதம்பரம் தனித்தொகுதியில் திருமாவளவன் ஏற்கெனவே கூறி வந்ததைப் போல அவரே போட்டியிடுகிறார்.
ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும், ஒரு தொகுதியில் கூட்டணிக் கட்சியின் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான காரணம் குறித்து திருமாவளவன் கூறுகையில், “சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து தாமதப்படுத்துகிறது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே சிதம்பரத்தில் தனிச்சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறோம். அதனால் சிதம்பரத்தில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். இரண்டு தொகுதிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு கூட்டணிக் கட்சியான திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரத்தில் போட்டியிடுகிறோம்” என்றார்.
தமிழகத்தைத் தவிர்த்து ஆந்திரம் மற்றும் கேரளாவிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆந்திராவில் குண்டூர், சித்தூர் (தனித்தொகுதி), விசாகப்பட்டினம், திருப்பதி (தனித்தொகுதி), ராஜம்பேட் மற்றும் கடப்பா உள்ளிட்ட ஆறு தொகுதிகளிலும், கேரளாவில் இடுக்கி, கோட்டயம் மற்றும் கொல்லம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இந்த
இரண்டு மாநிலங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடுவதாகவும், தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்தார்.
�,