தனது அறையில் சிசிடிவி பொருத்த உத்தரவிட்டும் அதனைச் செயல்படுத்தாதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகனுக்கு எதிராக, அதே துறையில் பணிபுரியும் பெண் எஸ்.பி.ஒருவர் பாலியல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், “உயரதிகாரிகளுக்கு எதிரான புகார்களைத் தவிர்க்கவும், பாலியல் தொல்லைகளிலிருந்து பெண் அதிகாரிகள், பணியாளர்களைப் பாதுகாக்கவும் உயர் அதிகாரிகளின் அறைகளிலும், அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமெனவும் தலைமைச் செயலாளருக்குப் பரிந்துரைத்த நீதிபதி, தானும் அதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தியின் வார்த்தைகளின் படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தன் அறையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்” என்று உயர் நீதிமன்ற நிர்வாகப் பிரிவு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் உத்தரவு பிறப்பித்து நான்கு வாரங்கள் ஆகியும், இன்னும் சிசிடிவி கேமரா பொருத்தாதது குறித்து, இன்று (மார்ச் 11) பதிவாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். கேமரா பொருத்த உயர் நீதிமன்றத்தில் நிதி இல்லாவிட்டால், தானே செலவை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, நீதிமன்றங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதி, தனது விசாரணையை இணையதள வாயிலாக ஒளிபரப்ப உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீதிபதிகள் அறையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, எவ்வளவு செலவிடப்பட்டது என்பது குறித்து பதில் அளிக்கவும் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.�,