விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக புகழேந்தி போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமை இன்று (செப்டம்பர் 24) அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும் போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி, முகையூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் உள்பட 22 பேர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி போட்டியிட வேண்டி கள்ளக்குறிச்சி எம்.பி கவுதமசிகாமணி விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக [திமுக வேட்பாளர் புகழேந்தி: பொன்முடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/09/23/95) என்ற தலைப்பில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் நேற்று மதியப் பதிப்பில் வெளியிட்ட செய்தியில்,
“செப்டம்பர் 22 ஆம் தேதியே முன்னாள் அமைச்சரும் மத்திய மாவட்டச் செயலாளருமான பொன்முடி, வேட்பாளர் ரேஸில் இருக்கும் புகழேந்தியையும், ஜெயச்சந்திரனையும் அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது இருவரிடமும் விவாதித்து, ‘புகழேந்தி தேர்தலில் போட்டியிடட்டும். உனக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும்’ என்று ஜெயச்சந்திரனிடம் கூறிய பொன்முடி, ‘நாளை அறிவாலயம் போய் விருப்ப மனு கொடுத்துவிடு. மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் கூட வருவார்கள்’ என்று புகழேந்தியிடம் தெரிவித்தார்” என்று சொல்லியிருந்தோம்.
அப்போதே புகழேந்தியிடம் பூத் செலவுக்காக முதல் கட்டமாக ஒரு பூத்துக்கு 5 ஆயிரம் வீதம் சுமார் 300 பூத்துகளுக்கு 15 லட்சம் ரூபாயை மாவட்டச் செயலாளர் அமைச்சர் பொன்முடி பெற்றுக்கொண்டதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப்டம்பர் 24) நடைபெற்றது. விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில், தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற வேட்பாளராக நா.புகழேந்தி போட்டியிடுவார் என தலைமைக் கழகத்தினால் அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
புகழேந்தி, தற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளராக உள்ளார். விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதியைச் சேர்ந்தவரான புகழேந்தி, 1973ஆம் ஆண்டிலிருந்து திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், பொதுக் குழு உறுப்பினர் என கட்சியில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டவர் புகழேந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் புகழேந்தியுடன் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி,“விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக புகழேந்தியை தலைவர் அறிவித்திருக்கிறார். 12 பேர் நேர்காணலில் கலந்துகொண்டிருந்தாலும், அவர்களில் ஒருவரான புகழேந்தி விக்கிரவாண்டியில் நிறுத்தபட்டிருக்கிறார். மற்ற அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து சிறப்பாக பணியாற்றுவதற்கு முன்வந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.�,