தமிழகம், புதுச்சேரியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (செப்டம்பர் 30) மாலையுடன் முடிவடைந்தது.
தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. கடந்த வெள்ளிக் கிழமை வரை விக்கிரவாண்டி தொகுதியில் 8 பேரும், நாங்குநேரி தொகுதியில் 12 பேரும் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தனர். இறுதி நாளான இன்றுதான் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் காணை ஒன்றிய அதிமுக செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் மற்றும் நிர்வாகிகள் புடைசூழ விக்கிரவாண்டி தேர்தல் நடத்து அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல திமுக வேட்பாளர் புகழேந்தி, முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனும் இன்று மனுதாக்கல் செய்தார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனும் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை சமர்பித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உடனிருந்தார்.
இதேபோல காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் ஜான்குமார், முதல்வர் நாராயணசாமியுடன் உப்பளம் கோலாஸ் நகர் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்து தேர்தல் அதிகாரி மன்சூரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக, பாஜக, பாமக நிர்வாகிகளுடன் சென்று என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வர் வேட்புமனுவை அளித்தார்.
இரு தொகுதிகளுக்கும் இன்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக விக்கிரவாண்டி தொகுதியில் 23 பேரும், நாங்குநேரியில் 36 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். காமராஜர் நகர் தொகுதியில் 18 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை துவங்கவுள்ளது. மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 3ஆம் தேதி இறுதிநாள் ஆகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.�,