விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்டப் பொருளாளர் புகழேந்தி போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள் திரண்டுவந்து பணியாற்ற, திமுகவின் தேர்தல் பணிகளுக்கென முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் செயலாளராக ஜெகத்ரட்சகனும் உறுப்பினர்களாக மஸ்தான், அங்கையற்கண்ணி, டி.எம்.செல்வகணபதி, ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியும் உள்ளனர். அதேபோல ஒன்றிய பகுதிகளுக்கு கே.என்.நேரு, ஆ.ராசா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு தேர்தல் பணிக்காக அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நாள்தோறும் தங்கள் பகுதிக்குட்பட்ட இடங்களில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தேர்தல் பணிக்கென நியமிக்கப்பட்டவர்களைத் தவிர, மற்ற மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் விக்கிரவாண்டி தொகுதிக்குச் செல்ல வேண்டாம் என ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். காரணம், தேர்தல் செலவு அதிகமாகும் என்பதும், கூட்டம் அதிகமாகக் கூடுவதால் அது மக்களுக்கு மிகுந்த இடையூறாக இருக்கும் என்பதும்தான்.
ஆனால், பிரச்சாரத்தின்போது பொன்முடி செல்லும் இடங்களில் திமுகவினரின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற ஒன்றியப் பொறுப்பாளர்களின் பகுதிகளில் அவ்வளவாக கூட்டத்தைப் பார்க்கமுடியவில்லை என்றும் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தச் சமயத்தில் மகளிரணித் தலைவர் கனிமொழி தலைமையில் விக்கிரவாண்டி தொகுதி திமுக மகளிரணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொன்முடி பேசியபோது, “இது தேர்தல் வெற்றி விழாக் கூட்டம்” என்று கூறியுள்ளார். இந்தத் தகவலும் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டிருக்கிறது. பொன்முடியின் பேச்சும், களத்திலிருந்து வந்த தகவல்களும் வேறு வேறாக இருப்பதாக யோசித்திருக்கிறார் ஸ்டாலின்.
இதையடுத்து, பொறுப்பாளர்களைத் தொடர்புகொண்டு தொகுதியின் கள நிலவரம் குறித்து விசாரித்திருக்கிறார். பொறுப்பாளர்களில் பெரும்பாலானோர், ‘தொகுதிக்குள் கட்சியே பெரிதாக இல்லை. கூட்டமும் குறைவாகத்தான் வந்துகொண்டிருக்கிறது. பொன்முடி மற்ற நிர்வாகிகளை அனுசரித்துச் செல்வதில்லை’ என்று புகார் வாசித்திருக்கிறார்கள்.
இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கான வியூகத்தை மாற்றியிருக்கிறார் ஸ்டாலின். சென்னை உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு, ‘இடைத் தேர்தல் பணிகளைக் கவனிக்க விக்கிரவாண்டிக்கு உடனடியாகக் கிளம்புங்கள்’ என்று ஸ்டாலின் வீட்டிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆயுதபூஜை முடிந்த பிறகு சென்றுவிடுகிறோம் என்று அவர்களும் உறுதியளித்துள்ளனர்.�,”