விக்கிரவாண்டியில் உதயநிதி: நன்றிக் கடன் தீர்த்த கௌதம சிகாமணி

Published On:

| By Balaji

இடைத்தேர்தல் நடக்க இருக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பொன்முடி, மத்திய மாவட்டப் பொருளாளரான புகழேந்தியை விருப்பமனு தாக்கல் செய்யச் சொன்ன நிலையில் அவரும் விருப்பமனு கொடுத்தார். அதேநேரம், பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யு.மான கௌதம சிகாமணியோ, இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்காக விருப்ப மனு கொடுத்துள்ளார். சில மணி நேர இடைவெளியில் இந்த இரு விருப்பமனுக்களும் இன்று (செப்டம்பர் 23) அறிவாலயத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் அப்பாவும் மகனும் வெவ்வேறு நிலை எடுத்திருக்கிறார்களோ என்று திமுக வட்டாரத்தில் விவாதம் தொடங்கியிருக்கிறது.

ஆனால், விக்கிரவாண்டியில் உதயநிதி போட்டியிட வேண்டும் என்பது கௌதம சிகாமணியின் நெடுநாள் விருப்பம். கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் வெளியிட்ட டிஜிட்டல் திண்ணை பகுதியில், [விக்கிரவாண்டியில் உதயநிதி- திமுக, அதிமுக வியூகம்!]( https://minnambalam.com/k/2019/08/27/56 )என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியில், “விக்கிரவாண்டி தொகுதிக்கான போட்டியில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தி, விக்கிரவாண்டி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட திமுகவினர் சீட் கிடைக்குமா என்று முயன்று கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கௌதம சிகாமணி சில நாட்களாக இன்னொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவர் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை விக்கிரவாண்டியில் நிற்கச் சொல்லி உதயநிதியிடமே நேரடியாக வலியுறுத்தி வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் பாரிவேந்தருக்காக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி தொகுதியை கடைசி நேரத்தில் உதயநிதிதான் தலையிட்டு, கௌதம சிகாமணிக்குப் பெற்றுக் கொடுத்தார். அதற்கு நன்றி செலுத்தும் வகையில் இப்போது விழுப்புரம் மாவட்டத்தில் உதயநிதியை போட்டியிட வற்புறுத்தி, தலைமையிடம் தன் கிராஃபை உயர்த்திக் கொள்ளத் திட்டமிடுகிறார் கௌதம சிகாமணி. அதனால் தான் எப்படியாவது உதயநிதியை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சி செய்கிறார் கௌதம சிகாமாணி” என்று குறிப்பிட்டிருந்தோம்.

மின்னம்பலத்தின் அந்த வார்த்தைகள்தான் அச்சு பிசகாமல் இன்று அறிவாலயத்தில் நடைபெற்றிருக்கின்றன.

உதயநிதிக்காக விருப்ப மனுவை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கொடுத்திருக்கிறார் கௌதம சிகாமணி. அதன் பின் அறிவால வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,

“விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட பல்வேறு திமுக நிர்வாகிகள் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நான் என் விருப்பத்தைத் தெரிவிக்கும் வகையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் நண்பர் உதயநிதி அவர்கள் போட்டியிட வேண்டும் என்று விருப்பமனுவை தலைமையிடம் கொடுத்துள்ளேன்.

நடந்துமுடிந்த 22 தொகுதி இடைத்தேர்தல்களில் 13 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றது. விக்கிரவாண்டி தொகுதியில் ஆளும் அரசு எவ்வளவு அத்துமீறல்கள் செய்தாலும் திமுகதான் நூறு சதவிகிதம் வெற்றிபெறும். இந்த நிலையில் உதயநிதி அங்கே போட்டியிட்டால் தமிழ்நாடு முழுதும் தெரியக் கூடிய ஸ்டார் தொகுதியாக மாறும். என்றாலும் வேட்பாளார் பற்றிய இறுதி முடிவு தலைமைதான் எடுக்கும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார் கௌதம சிகாமணி.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share