வால்மார்ட் – ஃபிளிப்கார்ட் ஒப்பந்தத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை நடத்த அனைத்திந்திய வர்த்தகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட்டில் 77 விழுக்காடு பங்குகளை உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தத்தையடுத்து இந்தியாவின் சந்தை வாய்ப்புகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள, அதிகளவில் முதலீடுகளைக் குவிக்க வால்மார்ட் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஃபிளிப்கார்ட் மூலம் வால்மார்ட்டின் தொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்த 2 பில்லியன் டாலர் வரையில் இந்தியச் சந்தையில் முதலீடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வால்மார்ட் ஒப்பந்தத்துக்கு அனுமதியளித்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த சிறு நிறுவனங்களின் சில்லறை வர்த்தகமும் அழிந்துவிடும் என்று வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே வால்மார்ட் ஒப்பந்தத்துக்கு எதிராகப் போராட்டக் களத்தில் குதிக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அனைந்திந்திய வர்த்தகர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் *பிரவீன் கண்டேல்வால்* இதுகுறித்து *ஐ.ஏ.என்.எஸ்.* ஊடகத்திடம் பேசுகையில், ‘வால்மார்ட் – ஃபிளிப்கார்ட் ஒப்பந்தத்துக்கு எதிராக செப்டம்பர் 28ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை (பாரத் டிரேடு பந்த்) ஒருங்கிணைத்துள்ளோம். சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் இந்த ஒப்பந்தத்தை அரசு முடக்க வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டம் மட்டுமின்றி பொதுமக்களின் ஆதரவுடன் வர்த்தகர்களை இணைத்து மிகப்பெரிய போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
செப்டம்பர் 15ஆம் தேதி ரத யாத்திரையையும், டிசம்பர் 16ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய பேரணி ஒன்றையும் வர்த்தகர் சங்கங்கள் நடத்தத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி, அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்துத்தான் போராட்டம் தீவிரமடையுமா அல்லது கைவிடப்படுமா என்று முடிவு செய்யப்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.�,