�
இந்தியாவின் மிகப் பெரும் 20 கடனாளிகள் இணைந்து இந்திய வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக் கடன் அளவில் 20 சதவிகிதத்தைக் கொண்டிருப்பது ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு *டி.என்.ஏ. இந்தியா* ஊடகம் சார்பாக இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2018 மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் இந்திய வங்கிகளின் மொத்த வாராக் கடன் அளவு ரூ.10.2 லட்சம் கோடியாக உள்ளது. 2017-18 நிதியாண்டின் முடிவில் மிகப் பெரும் கடனாளிகள் வங்கிகளிடம் பெற்ற மொத்தக் கடன் ரூ.4.69 லட்சம் கோடியாகும். இதில் 50 சதவிகிதம் அளவு, அதாவது ரூ.2.36 லட்சம் கோடி வாராக் கடனாக மாறியுள்ளது. இந்த 20 கடனாளிகளின் வாராக் கடன் மதிப்பானது ஒட்டுமொத்த வாராக் கடனில் 20 சதவிகிதமாகும்.
தனியார் வங்கிகளைப் பொறுத்தவரையில், மிகப் பெரும் 20 கடனாளிகளுக்கு அவை வழங்கிய ரூ.1.31 லட்சம் கோடி கடனில் 34 சதவிகிதம் அளவு வாராக் கடனாக மாறியுள்ளது. 2016-17 நிதியாண்டில் மிகப் பெரும் கடனாளிகளுக்கான வாராக் கடன் வசூலில் 10 சதவிகிதம் உயர்வைச் சந்தித்திருந்த பொதுத் துறை வங்கிகள், 2017-18 நிதியாண்டில் 3 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளன. 2015-16ஆம் ஆண்டில் இதில் 18 சதவிகிதம் வளர்ச்சி இருந்தது. மிகப் பெரும் கடனாளிகளுக்கு அதிகக் கடன்களை வாரி வழங்கும் இந்திய வங்கிகள், இந்தியாவின் சிறு, குறு நிறுவனங்கள் துறையினருக்குப் போதிய அளவில் கடனுதவி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், தற்போது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.�,