]வாரணாசி செல்லும் பிரியங்கா காந்தி

Published On:

| By Balaji

உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரியங்கா காந்தி வரும் 28ஆம் தேதிக்குள் மோடியின் தொகுதியான வாரணாசிக்குச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரியான பிரியங்கா காந்தியை கிழக்கு உ.பி பொதுச் செயலாளராக நியமித்தார். இதன்மூலம் அவர் 41 தொகுதிகளைக் கவனிப்பார். மேற்கு உ.பி பொதுச்செயலாளரான ஜோதிராதித்ய சிந்தியா 39 தொகுதிகளைக் கவனிப்பார்.

அண்மையில் பிரியங்கா காந்தி, உ.பி.யில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரியங்காவை மோடிக்கு எதிரான போட்டியாளராக நிறுத்த வேண்டும் என்ற காங்கிரஸ் தொண்டர்களின் குரல்கள் வலுத்தன. ஏபிபி-சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் வாரணாசி தொகுதியில் பிரியங்காவுக்கு 60 சதவிகித ஆதரவு கிடைத்தது.

இந்த நிலையில் பிரியங்கா காந்தி மீண்டும் உத்தரப் பிரதேசத்தில் நான்கு நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். அப்போது அவர் வாரணாசியிலும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரியங்காவின் வருகையால் வாரணாசி காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வரும் பிப்ரவரி 28ஆம் தேதி காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது, அதற்கு முன்னதாக பிரியங்கா வாரணாசி சென்று பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். அங்கு, பூத் கமிட்டி உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசனைகள் வழங்கவுள்ளதாகவும், மோடியின் ஐந்தாண்டு கால திட்டங்கள் குறித்துக் கேட்டறியவுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாரணாசியில் பேரணியில் ஈடுபடும் பிரியங்கா காந்தி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணைநிலை ராணுவ வீரர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார். மேலும், கும்பமேளாவையொட்டி அலகாபாத்தில் அவர் புனித நீராடுவார் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share