,வானச் சித்திரம்!

Published On:

| By Balaji

ஒரு கப் காபி

மதிப்புக்குரியவரும், அன்புக்குரியவருமான வழக்கறிஞர் அருண் வைத்திலிங்கம் அவர்கள் அண்மையில் அதிகாலையில் மெரினாவில் வாக்கிங் சென்றபோது, வானத்தில் நிலவிய மேகக் கலவையை புகைப்படங்களாக எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். ஏதோ ஒரு அவசர வேலையில் இருந்த நிலையில் சட்டெனெ என் கண்ணில் பட்ட அந்த படங்களால் மனம் ஒரு கணம் லேசாகியது.

வண்ணப் போர்வையொன்றை விசிறியடித்தது போலவும், ஒரு திருவிழாவை தொலைதூரத்தில் இருந்து பார்ப்பது போலவும் பலப் பல எண்ணங்களை முதலில் ஏற்படுத்தியிருந்தது அந்த புகைப்படங்கள். புகைப்படத்தில் பறந்த பறவைகளின் சிறகசைப்பு நெஞ்சிலும் நிகழ்ந்தது. மெல்ல மெல்ல பார்க்கும்போது புற சித்திரிப்புகள் பொலபொலவென உதிர்ந்து அகத்தில் பல மாற்றங்களை, பல அசைவுகளை, பல நெகிழ்வுகளை ஏற்படுத்த ஆரம்பித்தன அந்தப் படங்கள்.

அதிகாலை வானத்தின் புகைப்படமே இவ்வளவு மாற்றங்களை நம்முள் ஏற்படுத்தும்போது, நேருக்கு நேராக அதிகாலை வானத்தைப் பார்க்கும்போது அது இன்னும் பல நெருக்கங்களை நமக்கும் வானத்துக்கும் ஏற்படுத்தும். எப்பேற்பட்ட இரும்பு நெஞ்சினராக இருந்தாலும், வாழ்வின் சில சமயங்களில் உடைந்து நொறுங்கி அழுகையால் மனதை கழுவிக் கொள்ளும் சந்தர்ப்பம் நேரிடத்தான் செய்யும். அதுபோனற சந்தர்ப்பங்களில்தான் என்றில்லாமல்…. அவ்வப்போது நமக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வானத்தை, மேகத் திப்பிகள் மிதக்கும் வானத்தைப் பார்க்க வேண்டும். அதிலும் அதிகாலை நேரத்தில் சூரியச் செஞ்சாந்து நிறமும் சேர்ந்துகொண்டு மேகம் காட்டும் மிதமிஞ்சிய அழகு ஆகா.

காசு பணம் செலவு பண்ணி மலையேறி சுற்றுலா போறதை விட, கடற்கரை போய் காலையில சூரியன் எழுவதைப் பாருங்கள். அதைவிட ஒரு சுற்றுலா கிடையாது என்று என் நண்பனொருவன் வாக்கிங் போகும்போதெல்லாம் வாடிக்கையாய் சொல்லுவான். வானத்தில் அவ்வளவு வரலாறு மறைந்திருக்கிறது. அதிலும் காலை நேரத்து வானமும், மாலை நேரத்து வானமும் அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் ஓர் உயரமான உண்மையை நமக்குச் சொல்லும், அதுதான் நிலையாமை.

இரண்டு நொடிகளுக்கு மேல் மேகத்தை ஒரே வடிவில் நீங்கள் பார்ப்பது அரிது. வானச் சித்திரம் நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கும். பூமியின் மேல் நின்றுகொண்டு பத்திரமாக வைத்திருக்கிறோம் என்று நாம் செய்துவரும் சிறுபிள்ளைத் தனங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கிறது அந்த வானத்தின் சித்திரம்.

நிலையாமை என்பதுதான் அழகு. எல்லாம் நிலையாக இருந்தால் ஏது அழகு! வானத்தின் மேக வார்த்தைகள் நெஞ்சுக்குப் புரிகின்ற மொழியில் பேசுகின்றன. அண்ணாந்து பாருங்கள்! உயரமான உண்மை உங்களுக்காக காத்திருக்கிறது!

**-ஆரா**

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share