வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!

Published On:

| By Balaji

அமமுகவிலிருந்து விலகிய பாப்புலர் முத்தையாவை கட்சியின் வாட்ஸ் அப் குழுவில் வைத்திருந்தது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய ஐடி விங் நிர்வாகியை, மாவட்டச் செயலாளர் லக்கி முருகன் ஆதரவாளர்கள் தாக்கியதாக எழுந்துள்ள புகார் திருவள்ளூர் மாவட்ட அமமுகவில் பரபபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமமுகவில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக, நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்தவர் பாப்புலர் முத்தையா. தேர்தலில் அமமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி, நெல்லை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் சகிதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அமமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு தனித்தனியாக வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளன. மாவட்டச் செயலாளர், நிர்வாகிகள், துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்தக் குழுவில் இருப்பார்கள். இந்த நிலையில் அமமுகவிலிருந்து 3ஆம் தேதியே விலகிவிட்ட பாப்புலர் முத்தையா திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக வாட்ஸ் அப் குழுவில் தொடர்ந்து நீடித்துவந்திருக்கிறார். மாவட்டச் செயலாளர் லக்கி முருகனுக்கு, முத்தையா சித்தப்பா முறை என்பதுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து அம்மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளரான பாலச்சந்தர், ‘பொதுச் செயலாளருக்கு துரோகம் செய்தவர்களுடன் சேர்ந்துகொண்ட பாப்புலர் முத்தையா இன்றுவரை வாட்ஸ் அப் குழுவிலிருந்து நீக்கப்படவில்லை. அதற்கு காரணம் என்ன?’ என்று வாட்ஸ் அப் குழுவில் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனையடுத்து, அவரை வீடு தேடிச் சென்று தாக்கியுள்ளனர் லக்கி முருகன் ஆதரவாளர்கள்.

இது பற்றி நம்மிடம் பேசிய பாலச்சந்தர், “வாட்ஸ் அப் குழுவில் நான் கேள்வி எழுப்பியதற்கு அடுத்த நாள் திருவேற்காடு அன்பு நகரிலுள்ள என்னுடைய வீட்டுக்கு அமமுக வட்டச் செயலாளர் இளங்கோவன் ஆட்களுடன் வந்து, ‘மாவட்டச் செயலாளரையே எதிர்த்து கேள்வி கேக்குறியா’ என்று கூறி என்னை அடிக்கத் தொடங்கினர். கத்தியைக் காட்டி மிரட்டிய அவர்கள், நான் அடிவாங்குவதை லக்கி முருகனுக்கு வீடியோ கால் செய்தும் காட்டினர்” என்றவர் தொடர்ந்தார்,

இது தொடர்பாக ஜூன் 6ஆம் தேதி இரவு திருவேற்காடு காவல் நிலையத்தில் இளங்கோவன் மீது புகார் அளித்தேன். ஆனால் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. வெறும் சிஎஸ்ஆர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மாவட்ட அமைச்சர் பெஞ்சமினும், மாவட்டச் செயலாளர் லக்கி முருகனும் நல்ல நட்பில் இருப்பதால்தான் என்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுக்காதிருக்கிறார்கள். இங்கு அதிமுக மாவட்டச் செயலாளர், அமமுக மாவட்டச் செயலாளர் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. அனைவரையும் சமமாகவே பார்க்கிறார்கள். என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்.

மேலும், **“கட்சியிலிருந்து வெளியேறியவரை கட்சி வாட்ஸ் அப் குழுவில் வைத்திருந்தது ஏன் என்று கேள்வியெழுப்பிய கட்சிக்காரரை அடியாட்களை வைத்து தாக்கும் மாவட்டச் செயலாளர் லக்கி முருகனை கட்சிக்குள் வைத்திருக்கலாமா?”** என்று கேள்வி எழுப்பியவர், இதுதொடர்பாக பொதுச் செயலாளர் தினகரனையும் நேரில் சந்தித்து முறையிட இருப்பதாகவும் காட்டமாகத் தெரிவித்தார்.

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

**

[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)

**

**

[12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி](https://minnambalam.com/k/2019/06/07/16)

**

**

[மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!](https://minnambalam.com/k/2019/06/07/53)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share