எது இருந்தால் அரசியல் செய்ய முடியும் என்ற கேள்விக்கு, ‘வெறும் சாம்பல் இருந்தால்கூட அரசியல் செய்யலாம்’ என்ற பதிலே தமிழ்நாடு முதல் வடநாடு வரை கிடைக்கிறது.
ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதி முன்னாள் பிரதமரும் பாஜகவின் நிறுவனர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய் டெல்லியில் காலமானார். அவரது உடல் டெல்லியில் 17ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் அஸ்தியை இந்தியா முழுதும் கடல், நதி என்று 100 இடங்களில் கரைக்க பாஜக தலைமை ஏற்பாடு செய்து, ஒவ்வொரு மாநில பாஜக தலைவரிடமும் வாஜ்பாயின் அஸ்தி ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி கடந்த 22ஆம் தேதி வாஜ்பாயின் அஸ்தி தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டது. அப்போது தமிழகத்தின் பல கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
**அஸ்தி: திமுக நிலைப்பாடு என்ன?**
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கமலாலயம் சென்று வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார். இதுவும் அரசியலானது. வாஜ்பாய் உடலுக்கு டெல்லி சென்று நேரில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், சென்னையில் வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் எதிரொலித்தது.
“அரசியல் நாகரிகம் காக்கப்பட வேண்டும் என்பதுதான் யாவரின் விருப்பமும். அய்யா வாஜ்பாய் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிறகும் அவரது அஸ்திக்கு அஞ்சலி செலுத்துவது என்ன விதமான பகுத்தறிவு? அஸ்தி தொடர்பான திமுகவின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு.
மேலும் அவர், “இவையெல்லாம் என்னைப் போன்றோரை ஏமாற்றமடையச் செய்கின்றன. திமுக ஆட்சி கட்டிலில் வர வேண்டும். ஸ்டாலின் தலைவராக மகுடம் சூட்டுவது மட்டுமல்லாமல் முதல்வராகவும் வர வேண்டும் என்பது தான் என்னைப் போன்றோருக்கு விருப்பம். ஆனால் ஸ்டாலின் செயல்பாடுகள் அதை நோக்கி போகவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக அளவில் வாஜ்பாயின் அஸ்தி இப்படி ஒரு அரசியல் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது என்றால் தேசிய அளவில் இப்போதைய பாஜக தலைமையையும், பிரதமர் மோடியையும் குறிவைத்து வாஜ்பாயின் உறவுகளிடம் இருந்தே குரல்கள் எழுந்திருக்கின்றன.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மருமகள் முறை உறவினரான கருணா சுக்லா, பாஜக வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக மலினமான முறையில் வாஜ்பாயின் அஸ்தியைப் பயன்படுத்துவதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
**இறுதி ஊர்வலத்தில் நடந்தால் போதுமா?**
இதுகுறித்து கருணா சுக்லா ஏ.என்.ஐ. நியூஸ் 18 போன்ற செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியையும், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கையும் கடுமையாக தாக்கியிருக்கிறார்.
“பாஜக வாஜ்பாயின் மரணத்தை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தும் மலிவான அரசியல் செய்துகொண்டிருக்கிறது. வாஜ்பாய் இருந்தபோது அவரைப் பற்றி நினைக்காதவர்கள், பேசாதவர்கள், அவர் வழி நடக்காதவர்கள் இப்போது அவர் மறைந்ததும் அஸ்தியை எடுத்துக்கொண்டு ஓட்டுக்காக ஒவ்வொரு மாநிலமாகச் சென்று அதைக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
வாஜ்பாயால் உருவாக்கப்பட்டதுதான் சத்தீஸ்கர் மாநிலம். ஆனால் அம்மாநில முதல்வர் ராமன் சிங்கோ அவரது அமைச்சர்களோ இதுவரை வாஜ்பாயை எந்த வகையிலாவது நினைவு கூர்ந்திருக்கிறார்களா? மூத்த தலைவரும் பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரும் வாஜ்பாயோடு சேர்ந்து பாஜகவை வளர்தெடுத்தவருமான எல்.கே. அத்வானியை பாஜக தலைமை நடத்திவரும் விதமும் எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார் கருணா சுக்லா.
மேலும் அவர், “2019 தேர்தலை ஒட்டி வாஜ்பாயின் மரணத்தை பாஜக பயன்படுத்துவது வெட்கக்கேடானது. வாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி ஐந்து கிலோ மீட்டர் நடந்தே வந்தார் என்று பெருமைபடப் பேசுகிறார்கள். வாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தில் இவ்வளவு தூரம் நடப்பதற்கு பதிலாக, வாஜ்பாய் காட்டிய வழியில் பிரதமர் மோடி சில அடிகள் நடந்தாலே இந்த நாடு அவரைப் பாராட்டும்” என்று கடுமையாகக் குறை கூறியிருக்கிறார்.
**நேருவுக்கும், இந்திராவுக்கும் நடந்திருக்கிறது**
இதற்கு பாஜக சார்பில் உடனடியாக பதிலும் தரப்பட்டிருக்கிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோலி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,
“கருணா சுக்லாவுக்குப் பின்னால் காங்கிரஸ் இருக்கிறது. அவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர். அவர்தான் வாஜ்பாயின் மரணத்தை அரசியல் ஆக்குகிறார். இது துரதிர்ஷ்டவசமானது. வாஜ்பாயின் மறைவை அரசியலுக்கு அப்பாற்பட்ட, நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பாகக் கருதுகிறோம். எல்லாரும் டெல்லிக்கு வந்து வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த இயலாது என்பதாலேயே நாங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் அஸ்தியை எடுத்துச் செல்கிறோம்.
இது வாஜ்பாய்க்கு மட்டுமல்ல… நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள் மறைந்தபோதும்கூட அவர்களது அஸ்தி நாடு முழுதும் எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது” என்று கூறியுள்ளார் நளின்.
இதற்கிடையே வாஜ்பாயின் இன்னொரு மருமகளான காந்தி மிஸ்ராவும் கருணா சுக்லாவுக்கு பதில் அளித்துள்ளார்.
“வாஜ்பாய் என்ற மாமனிதர் கருணா சுக்லாவுக்கோ, எனக்கு மட்டுமோ சொந்தமானவர் அல்லர். அவர் இந்த நாட்டுக்கு உரியவர். எனவே நாடு முழுதும் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் செய்யப்பட்ட இந்த ஏற்பாடு தவறல்ல’’ என்று கூறியுள்ளார்.
வாஜ்பாய் தனது உடல் நலக் குறைவால் கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் செய்யாமல் விட்ட அரசியலை, இப்போது அவரது அஸ்தி செய்துகொண்டிருக்கிறது!�,”