வாக்கு மெஷினில் தில்லுமுல்லு: எதிர்க்கட்சிகள் அச்சம்!

Published On:

| By Balaji

தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒருநாள் மட்டுமே இடையில் உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி வாக்கு ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளன.

மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. எக்ஸிட் போல் கணிப்புகளால் தேர்தலின்போது காணப்பட்ட பரபரப்பை விட கூடுதல் பரபரப்புடன் அரசியல் கட்சிகள் தற்போது காணப்படுகின்றன. கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனையை பாஜக இன்று நடத்தவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான 22 கட்சிகள் டெல்லியில் ஒன்றுகூடி இன்று ஆலோசனை நடத்தியுள்ளன. பாஜக அல்லாத ஆட்சி அமைப்பது தொடர்பாகவும், விவிபாட் சரிபார்ப்பு சம்மந்தமாக தேர்தல் ஆணையத்தை சந்தித்து முறையிடுவது தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் அகமது படேல், குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட், அபிஷேக் மனு சிங்வியும், திமுகவின் சார்பில் கனிமொழியும், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சதீஷ் சந்திர மிஷ்ரா, சிபிஎம் சார்பில் சீதாராம் யெச்சூரி, சிபிஐ சார்பில் டி.ராஜா, ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிக் ஓ பிரைன், சமாஜ்வாதி சார்பில் ராம்கோபால் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் ஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் மஜீத் மேமன், தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் தேவிந்தர் சிங் ரணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த ஒன்றரை மாதங்களாக எழுப்பிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் குறித்துதான் இப்போதும் கேள்வியெழுப்புகிறோம். வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பில் வித்தியாசம் காணப்பட்டால், எல்லா தொகுதிகளிலும் விவிபாட்டில் பதிவான வாக்குகளை 100 விழுக்காடு சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தவுள்ளோம். இதுதொடர்பாக பல்வேறு முறை கேள்வியெழுப்பியும், தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்காதது குறித்தும் கேள்வியெழுப்புகிறோம்” என்றார்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு 22 எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு சென்று விவிபாட் சரிபார்ப்பு சம்மந்தமான தங்களது கோரிக்கை மனுவை தேர்தல் ஆணையர்களிடம் அளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் இதுகுறித்து ஆலோசித்து பதிலளிப்பதாகக் கூறியுள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முதலில் சரிபார்க்க வேண்டும். எங்காவது வித்தியாசம் காணப்பட்டால் 100 விழுக்காடு சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.

”தேர்தல் ஆணையம் மக்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது கட்டாயமானது. ஆனால் அது நடப்பதில்லை” என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இவிஎம் இயந்திரங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன என்றும் மத்தியப் படைகளை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் சந்த்ர மிஷ்ரா கூறினார்.

தேர்தல் ஆணையர்களை சந்தித்து மனு அளித்த பிறகு எதிர்க்கட்சிகள் மீண்டும் தங்களது ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து வருகின்றன. நாளையும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பான அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று விளக்க அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.

அதில், “ இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் சிசிடிவி வசதி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் எந்த நேரத்திலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். தேர்தல் ஆணையம் நேர்மையாக தமது பணியை செய்துவருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் உச்சபட்ச பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சந்தோவ்லி, காஜியாபூர் உள்ளிட்ட தொகுதிகளில் மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்து பாதுகாப்பற்ற வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது போன்றும், ஒரு போலீசார் கூட பாதுகாப்புக்கு இல்லாத இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருப்பது போன்றும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வரலானதைத் தொடர்ந்து இந்த அறிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் 100 விழுக்காடு ஒப்புகைச் சீட்டு சரிபார்க்க கோரி சென்னையைச் சேர்ந்த டெக் 4 ஆல் எனும் அமைப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு இது முட்டாள்தனமான மனு, என்றும் இவ்விவகாரத்தில் தலைமை நீதிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருப்பதால் இவ்விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் கூறி இன்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

.

.

**

மேலும் படிக்க

**

.

. **

[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)

**

.

.

**

[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/56)

**

.

**

[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share