வாக்கு சரிபார்ப்பு: ஏற்க மறுக்கும் தேர்தல் ஆணையம்!

Published On:

| By Balaji

கூடுதலாக ஒப்புகைச் சீட்டுகளைச் சரிபார்க்கக் கோரும் கட்சிகளின் கோரிக்கையை ஏற்றால் தேர்தல் முடிவு தாமதமாகும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

17ஆவது மக்களவைத் தேர்தலை இன்னும் ஒரு சில வாரங்களில் நாடு எதிர்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடைபெறும் தேர்தலின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த விவிபிஏடி எனப்படும் ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் கருவிகளை அதிக அளவில் பொருத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என 21 அரசியல் கட்சித் தலைவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, விவிபிஏடி கருவிகளைக் குறைந்தபட்சம் 50 சதவிகித வாக்குப் பதிவு இயந்திரங்களில் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் அப்போதுதான் மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவைக் கடந்த மார்ச் 22ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது. வாக்குகள் சரியாகப் பதிவாகின்றனவா என சரிபார்க்க தற்போது ஏதேனும் ஒரு தொகுதியில், ஒரு வாக்குச்சாவடியில் மட்டுமே ஒப்புகைச் சீட்டு முறை பின்பற்றப்படுகிறது அதை உயர்த்த முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 29) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. அதில், விவிபிஏடி கருவிகளைக் குறைந்தபட்சம் 50 சதவிகித வாக்குப் பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தினால் வாக்குகள் எண்ண தாமதமாகித் தேர்தல் முடிவுகள் வெளியிட 6 நாட்கள் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மின்னணு வாக்குப் பதிவு இந்திரம் விவிபிஏடியின் நம்பகத்தன்மை 99.9936 சதவிகிதம். இதில் கூடுதலாக ஒப்புகைச் சீட்டுகளைச் சரிபார்க்கும் நடைமுறையைச் சேர்ப்பதால் நம்பகத்தன்மை பெரிய அளவில் அதிகரித்துவிடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலான இடங்களில் விவிபிஏடி கருவிகளை வைத்து, ஒப்புகைச் சீட்டுகளைக் கணக்கிட வேண்டுமானால் தேர்தல் அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்தச் சீட்டுகளை எண்ண இதற்கான சிறப்பு இடங்களை ஏற்படுத்தி, அதிகாரிகள் நியமித்துக் கண்காணிக்க வேண்டியிருக்கும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விவிபிஏடி கருவிகள் மிகவும் பாதுகாப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. அதன் சோதனை முயற்சிகளில் சிறு பிழைகூட நேரவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. மேலும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் மிகவும் வெளிப்படைத்தன்மையான முறையில் இந்தச் சோதனை நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share