விசாரணை ஆணையத்தில் தனக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்களின் பட்டியலை சிறையில் சசிகலா பெற்றுக்கொண்டதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியதையடுத்து, அவருக்குப் பதிலாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராகி விளக்கம் அளித்தார். விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மனில் சசிகலா நலனுக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்மனுக்கு உரிய பதில் அளிக்க வேண்டுமென்றால், விசாரணையில் சசிகலாவுக்கு எதிராகச் சாட்சியம் அளித்தோரின் பட்டியலை அளிக்க வேண்டும், விசாரணை முடிந்த பிறகு சாட்சிகள் அனைவரிடமும் குறுக்கு விசாரணை செய்யப்பட வேண்டும்” என்று மனுவும் தாக்கல் செய்தார்.
இதையடுத்து கடந்த ஜனவரி 30ஆம் தேதி சாட்சியளித்தோரின் பட்டியலை சசிகலாவுக்கு வழங்க ஆணையர் ஆறுமுகசாமி உத்தரவிட்டார். தொடர்ந்து நவம்பர் 22ஆம் தேதி முதல் தற்போது வரை சசிகலா மீது புகார் கூறியவர்களின் பட்டியல் விரைவுத் தபால் மூலம் பெங்களுரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த விவரங்களை பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா கடந்த 1ஆம் தேதியன்று பெற்றுக்கொண்டதாக இன்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. பட்டியல் கிடைத்த ஒரு வாரத்தில் பதிலளிப்பதாக சசிகலா தரப்பில் கூறியிருந்த நிலையில், வரும் 7அல்லது 8ஆம் தேதி பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆணையத்தில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதென்று கூறி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த திமுக மருத்துவரணி நிர்வாகி சரவணன், தீபா, தீபக் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அப்பல்லோ நிர்வாகம் சார்பில் இரண்டு பெட்டிகள் நிறைய மருத்துவ ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,”