கரூர் தொகுதிக்கு உட்பட்ட திருகாம்புலியூரில் அதிமுக-அமமுகவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டபின் பிரச்சினைக்குரிய தொகுதியாக உள்ள வேறு எந்த தொகுதி ரத்து செய்யப்படும் என்ற பேச்சு எழுந்தது. கரூர் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக தன்னிடம் புகார் கொடுக்க வந்ததற்காக கரூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலையே நிறுத்துவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், கருர் தொகுதி தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அன்பழகன் மிரட்டல் தொனியில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அப்படியான நிகழ்வு ஏதும் நடைபெறாத நிலையில் இன்று காலை முதலே கரூர் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது. ஆனால் அந்த தொகுதிக்குட்பட்ட திருகாம்புலியூரில் வாக்குப் பதிவை தேர்தல் அதிகாரிகள் நிறுத்திவைத்துள்ளனர். கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மு. தம்பிதுரையும் அமமுக சார்பில் என். தங்கவேலும் போட்டியிடுகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையமும் பறக்கும் படையும் தீவிரம் காட்டிவந்தன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அதிமுக, அமமுக பரஸ்பரம் குற்றம் சாட்டிவந்தன. இந்நிலையில் திருகாம்புலியூரில் வாக்குப் பதிவு நடைபெறும் போதே வாக்குசாவடிக்கு அருகிலுள்ள வீட்டில் அதிமுகவினர் வாக்களிக்க வருபவர்களுக்கு பணம் கொடுப்பதாக அமமுகவினர் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக, அமமுகவினரிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் திருகாம்புலியூரில் வாக்குப் பதிவை ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நிறுத்தியுள்ளனர்.�,