வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்று குற்றம்சாட்டிய சைபர் நிபுணர் மீது டெல்லி காவல் துறையில் தலைமை தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது.
கடந்த 21ஆம் தேதி லண்டனில் ஐரோப்பாவுக்கான இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஸ்கைப் மூலம் அமெரிக்காவில் வசிக்கும், இந்திய சைபர் நிபுணரான சையத் சுஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சையத்தின் குற்றச்சாட்டு இந்திய அரசியலைச் சூடுபிடிக்க வைத்துள்ளது. இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று தெரிவித்த சையத் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்திய எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தில், 2009-14ஆம் ஆண்டு காலகட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கும் துறையில் பணியாற்றியதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தச் சமயத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா என்று ஆய்வு செய்ததாகவும், அதில் ஹேக் செய்ய முடியும் என்று நிரூபித்ததாகவும் சையத் கூறியிருக்கிறார். 2014ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் உயிரிழந்த பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான கோபிநாத் முண்டேவை 2013இல் சந்தித்ததாகவும், அவருக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்படுவது குறித்துத் தெரிந்ததாலே அவர் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
பாஜகவைத் தாண்டி சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய தன்னை அணுகியதாகவும், இயந்திரம் ஹேக் செய்யப்பட்டதால் தான் காங்கிரஸ் 201 இடங்களில் தோற்றது எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை முடக்கி, விருப்பப்பட்டவருக்கு வாக்களிக்கச் செய்யும் எந்த முயற்சியும் இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்களில் இல்லை என்று கூறிய தலைமை தேர்தல் ஆணையம் லண்டன் நிகழ்ச்சி பற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தது.
அதன்படி நேற்று (ஜனவரி 22) டெல்லி காவல் துறையில் புகார் அளித்துள்ளது. அதில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தவறான தகவலை பரப்பியவர்கள் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன. லண்டன் நிகழ்வில், காங்கிரஸ் எம்.பி கபில்சிபல் பங்கேற்றார். இவரது பங்கேற்பும் தற்போது, சர்ச்சையாகியிருக்கிறது.
மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இது காங்கிரஸால் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்றும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் ராய் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வேண்டப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளார். கபில்சிபல் லண்டன் நிகழ்ச்சியில் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது எழுப்பப்பட்டிருக்கும் சந்தேகத்தை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியிருக்கிறார்.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 543 இடங்களில் 282 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
**கபில்சிபல் விளக்கம்**
தன் மீதான பாஜகவின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ள கபில்சிபல், லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் ராய் அழைப்பின் பேரிலே லண்டன் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
சையத் சுஜா குற்றச்சாட்டுகளைப் பற்றி கருத்துத் தெரிவித்த கபில்சிபல், “இது எனக்கு ஒரு விஞ்ஞான கற்பனை கதையாகத்தான் தெரிகிறது. எனினும் அதைச் சரிபார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். “அதாவது, முக்கியமான ஒரு விவகாரத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு சரியோ, தவறோ… அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். சையத் கூறிய குற்றச்சாட்டு தவறு என்றால், அவர் மீது நடவடிக்கை எடுங்கள். அவர் கூறியது சரி என்றால், அது மிகவும் முக்கியமான பிரச்சினை” என்று தெரிவித்தார்.
�,”