வேகமாக வளர்ந்துவரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு நேற்று (நவம்பர் 21) சென்றடைந்தார். இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது இதுவே முதன்முறையாகும். அங்கு இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராம்நாத் கோவிந்த், “வெளிநாட்டுப் பயணத்தின்போது அங்குள்ள இந்திய வம்சாவளியினரைச் சந்திப்பதற்கே என் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
நாளை பிரதமர் ஸ்கார் மோரிஸன் உடன் இணைந்து மகாத்மா காந்தியின் சிலையை திறந்துவைக்கவுள்ளேன். இந்த ஆண்டு காந்தியின் 150ஆவது பிறந்த நாள் தொடர்பான உலகளாவிய கொண்டாட்டங்களை ஆரம்பித்திருக்கிறோம். இந்தச் சிலை அவரது வாழ்க்கை மற்றும் புகழுக்கு சரியான அஞ்சலியாக இருக்கும். ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் கவர்னர் ஜெனரலுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது எப்படி என்று விவாதிக்கவும் உள்ளேன். இங்கு ஏராளமான இந்திய சமூகங்கள் உள்ளன. இந்த மாதம் பண்டிகைக்கான மாதம். அண்மையில் தீபாவளியை கொண்டாடினோம். இன்று நபிகளின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். 23ஆம் தேதி குருநானக்கின் பிறந்தநாளை கொண்டாடவுள்ளோம். சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு முன்னதாகவே வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆஸ்திரேலியாவின் இந்திய சமூகம் அதிகம் மதிக்கப்படுகிறது என்பது நமக்கு கௌரவம் ஆகும். அதிகளவான இந்திய மாணவர்களின் வீடாகவும் ஆஸ்திரேலியா உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியுடன் உங்களை நீங்களே புதுப்பித்துக்கொண்டிருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த காலாண்டில் இந்தியா 8. 2 சதவிகிதப் பொருளாதார வளர்ச்சியை எட்டி உள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் ஒரு தேசம், ஒரு வரி, ஒரே சந்தை என இந்தியா மாறியுள்ளது.
இன்றைய தினம் இந்தியாவில் வணிகத்துக்கான வாய்ப்புகள், சமூக நிறுவனங்கள் மற்றும் கலாச்சார தொடர்புகள் ஆகியவற்றுக்கான முழு வாய்ப்புகளும் உள்ளன. உங்கள் ஒவ்வொருவரையும் எங்களின் பரிமாற்ற பயணத்தில் சேர அழைக்கிறேன். உங்கள் கருத்துகள், உங்கள் வணிக மாதிரிகள் மற்றும் உங்கள் முதலீட்டு ஆகியவற்றின் மூலம் பங்களிக்க முடியும்” என்று பேசினார்.�,