Art by Kanchan chandar
சமீபத்தில், பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவத்தை முகநூலில் ஒரு தாய் பகிர்ந்திருந்தார். மருத்துவமனையில் செவிலியாகப் பணிபுரியும் தாய் அவர். திடீரென அவரது மகளின் பள்ளிக்கூடத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது.
அவரது அலைபேசிக்கு நீண்டநேரம் அழைத்ததாக, புகார்சொல்லும் தொனியில் சொல்லியபோது அவர், தான் ஷிஃப்டில் இருந்ததாகச் சொல்லவும், உடனே பள்ளிக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். அவர் பதறி என்னவென்று கேட்க, நேரில் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
பதறியடித்து பள்ளிக்கு ஓடியிருக்கிறார் அவர். அங்கு, அவரது மகள் முன்னால் ஒரு பையன் மூக்குடைந்து நின்றிருக்கிறான். அவனது அம்மா அழுதபடி இருக்கிறாள். இவளோ, விவாகரத்தாகி தனியாக குழந்தையை வளர்ப்பவள். அங்கிருப்பவர்களிடம் என்னவென்று கேட்டதற்கு சொல்லப்பட்ட தகவல் இதுதான். அந்தப் பையன் அந்தப் பெண்ணின் மேலாடையை குறிப்பாக, பிராவை அற்றுவிட முயற்சித்திருக்கிறான். முதல்முறை எச்சரித்திருக்கிறாள். அவன் மறுபடியும் அதையே செய்ய, அவள் மறுபடியும் எச்சரித்திருக்கிறாள். அவன் அப்போதும் அதையே செய்ய மூக்கில் குத்தியிருக்கிறாள். இதுகுறித்து பெண்ணின் தாயாரிடம் பள்ளி நிர்வாகி கேட்டிருக்கிறார்: இப்படி வன்முறை செய்யலாமா என்று. வன்முறை செய்தது அவன்தானே என்று கேட்டதற்கு, அவனை எச்சரித்திருக்கிறோம். ஆனால் மூக்கில் குத்தியதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்திருக்கிறது. ஆகவே, அதற்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று, அந்தப் பெண்ணின் தாயிடம் கேட்டுள்ளார்கள்.
உள்ளாடையை வெட்டிவிடும் அவனை இதைவிட என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறாள் அந்தப் பெண்ணின் தாய். பாலியல் வன்முறை குற்றத்துக்கான புகாரை சம்பந்தப்பட்ட பையன் மீது கொடுப்பதாக சொன்னபிறகே மன்னிப்புக் கடிதம் எழுதும் கோரிக்கையை கை விட்டிருக்கிறார்கள் பள்ளி நிர்வாகத்தினர். பின்பு, வகுப்பு பிரிவை மாற்றி தன் பெண்ணை படிக்க வைத்திருக்கிறார் அந்த தாய்.
சரி, தவறு என்பது தாண்டி எது, அந்த மாணவனை உள்ளாடையை அறுக்கச் செய்தது? அதற்குப் பின்னிருக்கும் மனநிலை என்ன? மறைத்து வைக்கப்படும், சினிமாவில் காமத்தின் அடையாளமாக காட்டப்படும் பெண்ணின் அங்கம் குறித்த ஆர்வமும் அந்த வயதின் காமத்தைப் புரிந்துகொள்ளாத தன்மையும்தான்.
நம் பிள்ளைகளை காதலிக்க அனுமதிக்காமல் இருந்திருக்கிறோம். நம் காதலை மறைத்திருக்கிறோம். அந்தந்த பருவங்களில் வரும் உணர்வுகள் – உடல், மனம் சார்ந்த உணர்வுகளை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆனால் அதனாலெல்லாம் உடல் தன் இச்சைகளை மறைத்ததில்லை. உடலின் இச்சைகளை நாம் அசிங்கமென நினைக்கிறோம். சிறுகுடல், பெருங்குடலின் இச்சையே பசி. உடலின் தேவை என்பதில் மனதின் தேவையும் இணைந்திருக்கிறது. இதைப்பற்றிய உரையாடல் இன்றியே தமிழ்ச் சமூகம் நகர்கிறது – உடலுறவு சார்ந்து நிகழும் வன்முறைகளோடு.
உடலரசியலை பேசவேண்டிய காலம் வந்துவிட்டது. காம உணர்வு என்பது மார்பிலும் அந்தரங்க உறுப்புகளிலும் குடிகொண்டிருப்பதாக வரிந்து, அவற்றை மறைக்கும் முயற்சியில் நாம் இருக்கிறோம். கற்பு, கலாசாரம் என்ற பெயர்களில் நமது அறியாமையை மறைத்து வைத்துக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. உடலுறவின் அரசியல் பற்றியும் அறிவியல்ரீதியாக அதை அணுகும்விதம் குறித்தும் பேசுவதன்மூலம் இளவயதினருக்குள் இருக்கும் மர்ம ஆர்வங்கள் தீரும்.
இன்று இந்தியாவில் பெருகிவரும் போர்னோகிராபி மோகம் இதிலிருந்து கிளர்ந்ததுதான். கையில் அலைபேசி. இணையதள இணைப்பு. யூ டியூபில் காமப் படங்கள். எல்லையில்லா சுவாரஸ்யத்தில் சிலநேரம் கண்ணில்படும். பெண்களின் புடவை விலகலை க்ளிக் செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. சமீபத்தில் சென்னைப் பேருந்தில் மார்பைத் தொடவந்த ஒருவனிடம் ஒரு பெண், ‘கழற்றித் தரவா… வீட்டுக்குப் போய் உங்கம்மாவுக்கு இப்படியே இருக்கான்னு பாரு’ என்றாள். அவன் அவசரமாகப் பின்னகர்ந்து அடுத்த ஸ்டாப்பில் இறங்கினான். இது மிகவும் யோசிக்க வைத்தது.
சமூக கட்டமைப்பில் உடலுறவு சம்பந்தமான விஷயங்களையே நாம், நம் கோபத்தையும் கெட்ட வார்த்தைகளையும் வெளிப்படுத்த பயன்படுத்துகிறோம். புனித உறவுகள்பற்றி கொண்டாடுகிறோம். ஆனால் நிஜத்தில் ஏகப்பட்ட இன்செஸ்ட் எனப்படும் உறவுமுறைகளை கேள்விப்படுகிறோம். புகார் அற்று அவற்றை மறுபரிசீலனை செய்து அணுகுமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். 2015ஆம் ஆண்டு இந்தியாவில் 34,000க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அல்ஜீஜீரா அறிவிக்கிறது. எங்கு ஆரம்பிக்கிறது குழப்பம்?
நான் பல கல்லூரிகளுக்கு மாணவர்களிடம் பேசும் பயிலரங்கு முறைமைக்காக போகும்போதெல்லாம் அவர்களிடம் காதல்பற்றி பேசும்போதெல்லாம் ஒரு பெரும் தயக்கமும் மாறா உள்ளக்கிளர்ச்சியும் அவர்களிடம் தென்படும். அதை சரியான உரையாடல்மூலம் சமன்படுத்திவிட இயலும். ஆனால் உரையாடலின் முதல் வார்த்தைதான் நம்மிடமில்லை.
சமீபத்தில் 18 வயது நிரம்பிய ஒரு கல்லூரிப் பெண் எனக்கு முக நூலில் ஒரு கடிதம் எழுதியிருந்தாள்.
அன்புள்ள தமயந்தி,
உங்கள் கதைகள் எனக்குப் பிடிக்கும். எனக்கு பாடல்கள் என்றால் உயிர். என் வீட்டின் எதிர்வீட்டில் நன்றாகப் பாடும் ஒரு இளைஞன் எனக்கு காதலன் ஆனான். வாழ்க்கை பூராவும் நான் அவன் பாடி கேட்டபடியே வாழ்ந்துவிடலாமென நினைத்தேன். ஆனால் காதலைச் சொன்னபிறகு அவன் பாடாய்ப்படுத்துகிறான். யாரிடமாவது அலைபேசியில் பேசினால் உடனே சந்தேகம். ‘அந்த நம்பர டெலீட் செய்யாம காட்டு’ என்று கோபம். தினம் சண்டை. அழுகை. எப்போதாவது முத்தம். பின் சண்டை. நான் சந்தோஷமாக இல்லை. அவனை விட்டுப்பிரிந்தால் என்னை அடிப்பேன் என்கிறான். அவனுடன் எடுத்த புகைப்படத்தை முகநூலில் போடுவேன் என்கிறான். நான் தூங்கி பல நாளாகிறது. என்ன செய்யவென்று சொல்லுங்கள் என்று எழுதியிருந்தாள்.
நான் பதிலளித்தேன்
அவனைப் பிரிந்து விடு. வீட்டில் பேசு. பிரச்னை எனில் dhamayanthihfm@gmail.comக்கு எழுது என்றேன். அவள் வெகுயோசனைக்குப் பிறகு அவனைப் பிரிந்தாள். அவன் அவளைத் திரும்பியே பார்க்கவில்லை. சென்ற வாரம் நேரில் சந்திக்க வந்தாள்.
அவன் பாட்டைத்தான் நான் காதலிச்சிருக்கேன்னு நினைக்கேன் மேடம்… ஆனா, அவனோட நிராகரிப்பு, என்னைத் தேடிவராததன்மை வலிக்கிது என்றாள். நம் தமிழ்ச் சமூகத்து காதல் இப்படித்தான் ஆரம்பித்து குழப்பங்களோடு பயணிக்கிறது. கிளம்பும்போது என்னை அவள் கட்டிப்பிடித்து, ‘இப்ப நான் பலமா உணர்றேன்… காதல் எப்படி சந்தேகத்தை தரும் இல்லியா… எல்லாரும் நான் அவனை ஏமாத்திட்டேன்னு சொன்னாங்க. ஆனா அத நான் செய்யலன்னா என்னையே நான் ஏமாத்தியிருப்பேன் இல்லியா மேம் என்றவள், தள்ளிப் போகாதே பாடல்தான் என் டயலர் ட்யூன் தெரியுமா’ என்று சிரித்தாள்.
உங்களுக்குப் பகிர இயலாத, தயக்கம் நிறைந்த பிரச்னைகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிரலாம் நீங்கள் மின்னஞ்சலில்.
dhamayanthihfm@gmail.com
உரையாடுவோம்…
கரையேறுவோம்…
கட்டுரையாளர் குறிப்பு :
எழுத்தாளர் தமயந்தி :
ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’ ‘ சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘ இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘ விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.
�,”