வட மாநிலங்களில் போதிய மழையில்லாததால் கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி 21 சதவிகிதம் சரிவடைந்தது.
சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தோனேஷியாவைத் தொடர்ந்து இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. சீனா, இலங்கை, கென்யா உள்ளிட்ட நாடுகளும் அதிகளவில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளாக உள்ளன. இதில், கென்யாவில் விளைவிக்கப்படும் தேயிலையில் 95 சதவிகிதம் அளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் கென்யாவைப் போல, இந்தியாவால் தேயிலையை அதிகளவில் ஏற்றுமதி செய்ய இயலவில்லை. ஏனெனில், இங்கு தேயிலைக்கான தேவை மற்றும் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் ஆர்தோடாக்ஸ் ரக தேயிலை ஈராக், ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளுக்கும், சி.டி.சி. ரக தேயிலை எகிப்து, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா 1.35 கோடி கிலோ அளவிலான தேயிலை உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்த 2016ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 1.71 கோடி கிலோ அளவிலான தேயிலையைவிட 21 சதவிகிதம் குறைவாகும். இதில், வடமாநிலங்களில் 20 லட்சம் கிலோவும், தென் மாநிலங்களில் 1.15 கோடி கிலோவும் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 50 சதவிகித பங்களிப்பைக் கொண்டுள்ள அசாம் மாநிலத்தில், கடந்த பிப்ரவரி மாதம் தேயிலை உற்பத்தி 39 சதவிகிதம் சரிந்து 3.50 லட்சம் கிலோவாக உள்ளது. தமிழகத்தில் 20 சதவிகித சரிவுடன் 84 லட்சம் கிலோ அளவிலான தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 4 சதவிகித சரிவுடன் 16 லட்சம் கிலோ அளவிலான தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் போதிய மழை இல்லாததாலும், வறட்சியாலும்தான் தேயிலை உற்பத்தி சரிவடைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.�,