சரக்கு மற்றும் சேவை வரி அமலானதைத் தொடர்ந்து வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை குறைந்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்பட்ட பிறகு, சமையல் எரிவாயுவின் விலை ரூ.31.41 உயர்ந்தது. ஜி.எஸ்.டி-யில் சமையல் எரிவாயுவுக்கான வரி 5 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 434.15 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 465.56 ரூபாயாக உயர்ந்தது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விதிக்கப்பட்டு வந்த விற்பனை வரி, உற்பத்தி வரி, கலால் வரி ஆகியவை ஜி.எஸ்.டி-யில் விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்ததால் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ள நிலையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. முன்னதாக வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கான வரி 22.5 சதவிகிதமாக இருந்தது. இதில் 8 சதவிகித கலால் வரியுடன் சேர்த்து 14.5 சதவிகித மதிப்புக் கூட்டு வரியும் விதிக்கப்பட்டது. அது தற்போது ஜி.எஸ்.டி-யில் மொத்தத்தில் ஒரே வரியாக 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. இதன்படி, முன்னதாக டெல்லியில் ரூ.1,121-க்கு விற்பனையான வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டர் ஒன்றின் விலை தற்போது ரூ.1,052 ஆகக் குறைந்துள்ளது.�,