சென்னை போயஸ் கார்டன் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் துக்ளக் ஆசிரியரும், பாஜகவின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படுவருமான ஆடிட்டர் குருமூர்த்தி.
நேற்று (நவம்பர் 17) இரவு 9.30 க்கு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் தொடங்கிய வருமான வரித் துறையினரின் சோதனை நள்ளிரவு தாண்டி பின்னிரவு இரண்டு மணி வரை நீடித்தது.
இந்த ரெய்டு பற்றிப் பல தலைவர்களும் தங்களது கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில் பாஜக தலைமைக்கு நெருக்கமானவரான துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தனது ட்விட்டரில் வித்தியாசமான தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
“ஜெயலலிதாவின் கோட்டையாக கருதப்படும் போயஸ் கார்டனில் யாரும் நுழைய மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த சசிகலா தரப்பினர், தங்களது கொள்ளைகளுக்கான மின்னணு சாட்சிகளை போயஸ்கார்டன் வீட்டுக்குள்தான் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். ஆனால் உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு வருமான வரித் துறையினரோ யாரும் நுழைய முடியாது என்று நினைத்திருந்த ஜெயலலிதாவின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டனர். ஜெயலலிதாவின் வீட்டைத் தங்களது சொர்க்கபுரியாக மாற்றி வைத்திருந்தனர் சசிகலா குடும்பத்தினர். அதை உடைத்த வருமான வரித் துறையினருக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.�,