வருமானவரித் துறை: படிவங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம்!

Published On:

| By Balaji

வருமானவரித் துறையில் பல்வேறு படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வரி செலுத்துவோர் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு வருமான வரிச்சட்டம், 1961இன்படி சில படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டித்து மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பதிவு அல்லது அறிவிப்பு அல்லது ஒப்புதலுக்கான விண்ணப்பப் படிவம் தாக்கல் செய்ய இன்று (ஆகஸ்ட் 31) வரை வழங்கப்பட்டு இருந்தது. அவற்றை இனி 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்கு முன் தாக்கல் செய்யலாம்.

அதேபோல் சமன்படுத்தல் வரி அறிக்கை, அங்கீகரிக்கப்பட்டவர்களால் வழங்கப்பட வேண்டிய காலாண்டு அறிக்கை படிவம் எண் 15சிசி, பெறுநர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவிப்புகளைப் பதிவேற்றம் செய்யும் படிவம், முதலீடுகள் தொடர்பாக இறையாண்மை செல்வ நிதியத்தால் செய்யப்பட வேண்டிய தகவல்கள், ஒவ்வொரு முதலீட்டைப் பொறுத்தமட்டில் ஓய்வூதிய நிதியத்தால் செய்யப்பட வேண்டிய தகவல் ஆகியவற்றில் ஒரு சிலவற்றை வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்கு முன்பாகவும், ஒரு சிலவற்றை டிசம்பர் 31ஆம் தேதியும் தாக்கல் செய்யும் வகையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு [www.incometaxindia.gov.in](https://incometaxindia.gov.in/Pages/default.aspx) என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். இதேபோல் ‘விவாத் சே விஷ்வாஸ்’ சட்டப் பிரிவு 3இன் கீழ் செலுத்தப்பட வேண்டிய கட்டணத்துக்கான கடைசி தேதியும் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று வருமானவரித் துறை கமிஷனர் சுரபி அலுவாலியா தெரிவித்துள்ளார்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share