�
கடுமையான மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள கேரள மாநிலத்துக்கு ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தற்காலிக ஒன்றிய நிதியமைச்சரான பியூஷ் கோயல் ஆகஸ்ட் 21ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், “மழை வெள்ளத்தில் கேரளா பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஜிஎஸ்டி 3-ஆர்பி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசு நீட்டிக்கிறது. இதன்படி கேரள மக்கள் அக்டோபர் 5ஆம் தேதி வரை ஜிஎஸ்டி தாக்கல் செய்யலாம். வெள்ளத்தால் பேரழிவை கேரளா கண்டுள்ள நிலையில் அம்மாநிலத்துக்கு உதவுவதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை எளிதாகக் கேரளா எடுத்துச் செல்லும் வகையில் விதிகளையும் தளர்த்த முடிவு செய்துள்ளோம். அதன்படி வெளிநாட்டு நிவாரணப் பொருட்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், காப்பீட்டு நிறுவனங்கள் சிறப்பு முகாம்களை அமைத்துப் பயனாளிகளின் குடும்பங்களுக்கு உடனடியாக உதவிட வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். அதேபோல வேளாண் காப்பீடு செய்தவர்களுக்கும், காப்பீட்டு நிறுவனங்கள் இழப்புகளை மதிப்பீடு செய்து காப்பீட்டுத் தொகையை வழங்கி அவர்களை இழப்பிலிருந்து மீட்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, பழுதடைந்துள்ள சாலைகளைச் சீர்செய்யத் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.�,