வரலட்சுமி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெல்வட் நகரம் படத்தின் ட்ரெய்லரை தனுஷ் நேற்று (நவம்பர் 23) வெளியிட்டுள்ளார்.
நாயகிகளை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களுக்கு தமிழ்த் திரையுலகில் முன்பைவிட தற்போது வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த மாற்றத்தை உணர்ந்து பல கதாநாயகிகள் இத்தகைய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் மூலம் இந்தப் பட்டியலில் வரலட்சுமியும் இணைந்தார். தற்போது அதே பாணியில் மீண்டும் வெல்வட் நகரத்தின் படத்தின் மூலம் அவர் களமிறங்கவுள்ளார்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னால் அரசும், கார்ப்பரேட் நிறுவனமும் இருப்பதைக் கண்டறிந்து புகார் அளிக்கிறார் பத்திரிகையாளரான வரலட்சுமி. அதன் மூலம் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ரமேஷ் திலக், அர்ஜை, சந்தோஷ் கிருஷ்ணா, மாளவிகா சுந்தர், கஸ்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மனோஜ் குமார் நடராஜன் இயக்கியுள்ள இந்த படத்தை மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அச்சு ராஜமணி இசையமைக்க, பகத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேமண்ட் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
வரலட்சுமி நடிப்பில் இந்த ஆண்டு மிஸ்டர் சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. மாரி 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. கதாநாயகியாக மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் வரலட்சுமியின் கைவசம் கன்னி ராசி, அம்மாயி, பாம்பன், நீயா 2 போன்ற பல படங்கள் உள்ளன.
[வெல்வட் நகரம்](https://www.youtube.com/watch?v=ShEL10EOy8c&feature=youtu.be)�,