21 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் இன்று (ஏப்ரல் 4) மாலை கோலாகலமாகத் தொடங்கியது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் போட்டிகள் இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளன. அதன்படி நாளை (மார்ச் 5) முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த போட்டிகளில் பங்கேற்க 71 நாடுகளைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் அங்கு குவிந்துள்ளனர். 4,500 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த இருக்கிறார்கள்.
மொத்தமாக 19 விதமான விளையாட்டுக்கள் நடைபெறவிருக்கும் இந்த காமன்வெல்த் தொடரில் 275 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான தொடக்க விழா இன்று கார்ராரா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த தொடக்க விழாவிற்கு இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமில்லா இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அனைத்து நாடுகளின் வீரர்களும் தங்களது நாட்டின் கொடியை கைகளில் ஏந்தி அணிவகுப்பு செய்தனர். அதனுடன் ஆஸ்திரேலிய பாடகி ரிட்சி லீ குல்ட்டர் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை பாடல் பாடி உற்சாகப்படுத்தினார்.
கடற்கரையை ஒட்டி இருக்கும் அந்த மைதானத்தின் அழகினை பிரதிபலிக்கும் விதமாக வண்ணமயமான ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தியாவின் தேசியக்கொடியை ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து கையிலேந்தி இந்திய அணியை வழிநடத்தினார்.
இந்தியா சார்பில் மொத்தமாக 218 பேர் இந்த காமன்வெல்த் தொடரில் பங்கேற்க உள்ளனர். அதில் 103 வீராங்கனைகள் மற்றும் 115 வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்திய அணி மொத்தமாக 17 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
அதில் பேட்மிண்டன், பளுதூக்குதல், குத்துச்சண்டை, மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகிய போட்டிகளில் இந்திய அணி பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இந்திய ரசிகர்கள் இந்தமுறை இந்திய அணி வெற்றிபெற்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றும் என நம்பிக்கையுடன் போட்டிகளைக் காண உள்ளனர்.
�,”