“தயவுசெஞ்சு வடசென்னை -2 படம் எடுத்துடாதீங்க. எங்களால இதையே தாங்க முடியல” என்று வடசென்னை படத்தின் இயக்குநர் வெற்றி மாறனிடம் வடசென்னைவாசி ஒருவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அண்மையில் திரைக்கு வந்த சர்காரைத் தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘வடசென்னை’. இத்திரைப்படம் பற்றிய ஒரு கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் கடந்த 11ஆம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில்தான் வடசென்னை -2 படம் எடுக்கக் கூடாது என்று எதிர்க்குரல் ஒன்று எழுந்தது. அது அரங்கையே கொஞ்ச நேரம் அதிர வைத்தது.
இயக்குநர் பா.இரஞ்சித் படம் இயக்குவதைத் தாண்டி சினிமாவுக்கும் சமூகத்துக்கும் ஏதாவது செய்ய முனைந்துகொண்டே இருக்கிறார். அந்த முனைப்பில் முகிழ்த்ததுதான் கூகை திரைப்பட இயக்கம். தமிழ் சினிமாவில் அவ்வப்போது கவனம் பெறும் திரைப்படங்கள் பற்றிய கலந்துரையாடலைக் கூகை திரைப்பட இயக்கம் ஒருங்கிணைத்துவருகிறது.
அந்த வகையில்தான் வெற்றி மாறனின் வடசென்னை திரைப்படம் பற்றிய கலந்துரையாடல் கூட்டம் நவம்பர் 11ஆம் தேதி மாலை கூகையில் நடந்தது. தயாரிப்பாளர் தனஞ்செயன், எழுத்தாளர் சுகுணா திவாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உதவி இயக்குநர்களும் திரண்டிருந்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் கருத்துரையாற்றினர். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட சிலர் பேசுகையில், “வடசென்னை படத்தின் முடிவில் அன்புவின் எழுச்சி விரைவில் என்று முடித்திருந்தீர்கள். வடசென்னை-2 எப்போது வரும்?” என்ற அவாவை முன்னிறுத்தினர்.
எழுத்தாளர் கரன் கார்க்கி பேசுகையில், “வடசென்னை என்று பெயர் வைத்துவிட்டு நீங்கள் அதற்கு முழுமையாக நியாயம் செய்யவில்லை. இதில் முழுமையான வடசென்னை காட்டப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.
ஏற்புரையாற்றிய இயக்குநர் வெற்றி மாறன், “என் குருநாதர் பாலுமகேந்திராவின் ஏழாயிரம் புத்தகங்கள் என்னிடம் இருந்தன. இந்த கூகை நூலகத்தின் தொடக்க விழாவுக்கே நான் வந்திருக்க வேண்டும். தவறவிட்டேன். என்னிடம் இருந்த நூல்களில் ஐந்தாயிரம் புத்தகங்களை தனஞ்செயன் சாரின் கல்லூரி நூலகத்துக்குக் கொடுத்துவிட்டேன்” என்றவர் வடசென்னை படம் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை என்று கூறி அமர்ந்துவிட்டார்.
அடுத்த அமர்வு உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி. அப்போது, புளியந்தோப்பு சுதர்சனம் என்பவர் ஒரு கேள்வியை எழுப்பினார். “சோ கால்டு ரவுடிகள் வாழும் வடசென்னையில் இருந்து ஒரு கேள்வி. இன்னும் எத்தனை நாளைக்கு வடசென்னை என்றால் ரவுடிகள் வாழும் பகுதி என்று சொல்லி தமிழ் சினிமா எளிய மக்களை இழிவுபடுத்தப்போகிறது? வெறும் பத்து சதவிகித வடசென்னையைப் பெரிதுபடுத்தியும், மீதி 90 சதவிகித வடசென்னையை சிறுமைப்படுத்தியும் எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம். இது எப்போது முடிவுக்கு வரும்?” என்று கேள்வி எழுப்பினார். தான் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பிசிஏ பட்டப் படிப்பில் எண்பது சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றதையும், பெரிய நிறுவனத்தில் வேலை செய்வதையும் அவர் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த வெற்றி மாறன், “நான் இதில் எதையும் மறுக்கலை. டைட்டில் கார்டுலயே இது வடசென்னை பற்றிய பதிவல்ல. அங்கிருக்கும் ஒரு குழுவைப் பற்றிய கதை என்றுதான் தெரிவித்திருந்தேன். இதை நான் நேர்மையாகப் பதிவு செய்திருந்தேன். தவிர, இந்தப் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை பற்றிய தவறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக சிலர் என்னிடம் பேசினார்கள். படம் வந்த முதல் நாளே நான் அவர்களிடம் பேசினேன். மாரல் போலீசிங் பண்ணுகிறவர்கள் பற்றி எனக்குக் கவலை கிடையாது. ஆனால், இந்தப் படம் என்னுடைய நிலப் பரப்பை, என் மக்களைப் பாதிக்கிறது என்று சொல்பவர்களிடம் நான் மன்னிப்பு கேட்கத் தயங்கியது இல்லை. அதனால்தான் நான் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டேன்” என்று பதில் அளித்தார் வெற்றி மாறன்.
அப்போது கூட்டத்தில் இருந்து, “தப்பு பண்ணிட்டு எப்படி மன்னிப்பு கேக்குறேன்றீங்க? இந்தப் படத்துக்கு நீங்க வடசென்னைன்னு பேர் வெச்சிருக்கக் கூடாது. இங்க சில பேரு சொல்றாங்கன்னு வடசென்னை-2 எடுத்துடப் போறீங்க சார். அது தேவையே கிடையாது. வடசென்னை 2ஆம் பாகம் நீங்க எடுக்கக் கூடாது” என்று ஒரு குரல் எழுந்தது.
அப்போது பதிலளித்த வெற்றி மாறன், “பாருங்க… நீங்க பேசுறதுல ஜனநாயகமே இல்லையே?’’ என்றார்.
மீண்டும் பேசிய அந்த நபர், “இங்க இந்தப் படத்தைப் பற்றி பல பேரு பாராட்டினாங்க. ஆனா, வடசென்னையில இருக்குற மக்கள் என்ன நினைக்கிறாங்கனு சொல்லத்தான் நான் இங்க வந்தேன். இந்த படத்துல நீங்க வடசென்னையை பாழுங்கிணத்துல தள்ளிட்டீங்க. மறுபடியும் தள்ளாதீங்க” என்றார்.
வெற்றி மாறன், “நான் இந்தப் படம் நல்ல படம்னு சொல்லவே இல்ல. சரி. வடசென்னை 2 எடுக்க மாட்டேன்னு சொன்னா நீங்க சந்தோஷப்படுவீங்களா?’’ என்று கேட்க பலரும் அந்த வடசென்னைக்காரரை சமாதானப்படுத்தினர்.
யார் அவர் என்று விசாரித்தால் வட சென்னை தமிழ் சங்கத்தின் தலைவரும், தேவை என்ற சமூக நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான இளங்கோதான் எதிர்க்குரல் எழுப்பியவர்.
நாம் அவரிடம் பேசினோம்.
“அந்தக் கூட்டத்துல வடசென்னை என்ற சினிமா அந்த நிலம் சார்ந்த மக்கள்கிட்ட என்ன உணர்வை ஏற்படுத்தியிருக்குனு யாரும் கவலைப்படல சார். திரைமொழி, எடிட், தரம்னு பேசிக்கிட்டிருக்காங்க. நான் ஒரு வடசென்னைக்காரனா இந்தப் படத்தைப் பத்தி என் கருத்தை சொல்லத்தான் போனேன். அதை சொல்லிட்டேன். வடசென்னை மக்கள் பல பிரச்சினைகள்ல இருக்கோம். அதுக்காக பல வருஷமா போராடிக்கிட்டிருக்கோம். கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு எங்க பூமியோட பிரச்சினை… குடிநீர்ல கழிவுநீர் கலந்து வர்றது வடசென்னையோட முக்கியப் பிரச்சினை. இதப் பத்தியெல்லாம் மையப்படுத்தாம எல்லா இடத்துலயும் நடக்குற ரவுடியிசத்தை வடசென்னையோட வாழ்வியலா காட்டுறதைத்தான் தாங்கிக்க முடியல.
வெற்றி மாறன் சார் இந்தப் படத்தோட கடைசியில அறிவிச்சபடி, அன்புவின் எழுச்சியை வடசென்னை 2ஆம் பாகமா எடுத்தார்னா, வடசென்னையோட பொறுப்பான குடிமக்களோட எழுச்சியையும் அவர் சந்திக்க வேண்டிருக்கும்” என்று மின்னம்பலத்திடம் தெரிவித்தார் இளங்கோ.
**- ஆரா**
�,”