ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார்.
நாடு முழுவதும் அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பல்வேறு மாநிலங்களும் தங்களது கருத்துகளை மத்திய அரசிடம் வெளிப்படுத்தி வருகின்றன. கர்நாடக அரசு ஜூன் 1ஆம் தேதி முதல் மால்களை திறக்க வலியுறுத்தியுள்ளது. கோவா அரசு, உணவு விடுதிகளைத் திறக்க அனுமதி கேட்டுள்ளது. எனினும் ஒரு சில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
அண்மையில் மத்திய அரசு தரப்பிலிருந்து வெளியான தகவல்களின் அடிப்படையில், லாக்டவுன் 5.0 புதிய மாறுதல்களுடன் இருக்கும் என்றும் வரும் ஞாயிறு அன்று பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் அறிவிப்பார் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து மாநில முதல்வர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அடுத்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கருத்து கேட்டுள்ளார். இதில் சில மாநில முதல்வர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகத் தகவல் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில் கொரோனா அதிகம் பாதித்துள்ள நகரங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்த வாய்ப்பில்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனிடையே தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 29) முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மருத்துவர்கள் குழு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று (மே 29) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் மாவட்ட வாரியான நிலவரங்களை அறிந்து கொண்டு முதல்வர் முக்கிய முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-கவிபிரியா**�,”