`லண்டனில் டென்னிஸ் பார்த்த ஸ்டாலின்

Published On:

| By Balaji

ஒரு வாரப் பயணமாக லண்டன் சென்றுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை மனைவி துர்கா ஸ்டாலினுடன் கண்டு ரசித்துள்ளார்.

சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் கடந்த மே 29ஆம் தேதி ஆரம்பித்த நிலையில், 33 நாட்கள் நடைபெற்று ஜூலை 9ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து அன்றைய தினம் இரவே திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு ஒரு வாரகாலம் தங்கியிருக்கும் ஸ்டாலின்,அதன் பின் தமிழகம் திரும்புவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் லண்டனில் இன்று (ஜூலை 12) நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் பிரிவு இரண்டாவது அரையிறுதிப் போட்டியினை ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் கண்டு ரசித்துள்ளார். போட்டி நடந்த இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பழம்பெரும் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜையும் சந்தித்த அவர்கள், மைதானத்தைச் சுற்றி பார்த்த பின்பு அங்கு அமைக்கப்பட்டிருந்த முன்னாள் டென்னிஸ் சாம்பியன் எஃப்.ஜெ.பெர்ரியின் சிலை முன்பு புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டாலின், “லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சென்னையைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜையும் சந்தித்துப் பேசினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவாரத்திற்குப் பிறகு தமிழகம் திரும்பும் ஸ்டாலின், வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சுயாட்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பார் என்றும், கட்சி நிர்வாகிகள் மாற்றத்தில் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share