துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு துரைமுருகனின் காட்பாடி இல்லம், அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறை மற்றும் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக விளக்கமளித்த துரைமுருகன், “வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று பயந்து மத்திய, மாநில அரசுகளோடு உறவு வைத்திருக்கும் சில அரசியல்வாதிகள் செய்துள்ள சூழ்ச்சி இது” என்று குற்றம்சாட்டியிருந்தார். துரைமுருகன் ஏ.சி.சண்முகத்தைத்தான் மறைமுகமாக விமர்சிக்கிறார் என்றும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக ஏ.சி.சண்முகம் வேலூரில் நேற்று (மார்ச் 30) அளித்த பேட்டியில், “எனக்கும் துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. எந்த காரணத்தை முன்னிட்டும் அரசியல் பண்பாடு, நாகரிகமில்லாமல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இந்த ஏ.சி.சண்முகம் ஈடுபட மாட்டான். ரெய்டு குறித்த செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். அண்ணன் துரைமுருகன் என்னை இந்த விவகாரத்தில் சம்பந்தப்படுத்த வேண்டாம். தேவையில்லாமல் என் மீது பழி சொன்னால், நான் பல உண்மைகளைச் சொல்ல வேண்டி வரும்” என்று தெரிவித்தார்.
**ஆர்ப்பாட்டம் நடத்துவோம்: அழகிரி எச்சரிக்கை**
துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “தமிழகத்தில் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நோக்கத்தில் மத்திய பாஜக அரசால் ஏவிவிடப்பட்ட வருமான வரித் துறையினர் துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகள் தொடர்ந்தால் இதை எதிர்த்து வருமான வரித் துறை அலுவலகம் முன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று எச்சரித்துள்ளார்.�,