சசிகலா உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரிச் சோதனையில் அரசியல் ஏதுமில்லை காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால், இதற்குப் பின்னால் அரசியல் கணக்கு இருப்பதாக காங்கிரஸின் தற்போதைய மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.
குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படும் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, சென்னை கத்திப்பாரா சந்திப்பிலிருக்கும் நேரு சிலைக்கு மரியாதை செலுத்தச் சென்றார் ஈவிகேஎஸ். இளங்கோவன். அங்கிருந்த நேருவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தியவர், தமிழக நிலைமை பற்றிய பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது, சசிகலா உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 5 நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை பற்றிய தன் கருத்துகளை வெளியிட்டார். “ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடித்ததில் சசிகலாதான் முதல் குற்றவாளி என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே இந்த சோதனை தொடர்பாக, சசிகலாவை சிறையில் இருந்து அழைத்துவந்து தனிமையில் வைத்து விசாரிக்க வேண்டும்” என்றார்.
“இந்தச் சோதனையில் அரசியல் இருப்பதாக நான் நினைக்கவில்லை. காரணம், சசிகலாவும் அவரது உறவினர்களும் 20 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டை சுரண்டிவருகிறார்கள். இந்தச் சோதனைகள் ஜெயலலிதா காலத்திலேயே நடந்திருக்க வேண்டியது. காலம் தாழ்த்தி இப்போது நடத்தியிருக்கிறார்கள்” என்றார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட திருநாவுக்கரசர் இது குறித்த மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். “உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக, அதிமுகவின் ஒரு அணியை பலப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது” என்றார் அவர்.�,