ரூ.50 ஆயிரம் வரை ஆவணம் தேவையில்லை: தேர்தல் அதிகாரி!

Published On:

| By Balaji

தனிநபர் ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லலாம் என்றும், ரூ 10 லட்சத்திற்கு மேல் எடுத்துச் சென்றால் அதுகுறித்து வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று (மார்ச் 13) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தேர்தல் அன்று மதுரையில் சித்திரை திருவிழா நடப்பதால் ஏற்படும் சிக்கல் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்வார். அந்த அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்தார்.

“பள்ளி, கல்லூரிகளில் உரிய அனுமதி பெற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம். தமிழகம் முழுவதும் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 1 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உதகையில் உள்ள கொள்ளிமேடு பகுதியில்தான் ரூ.73.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தனிநபர் ஒருவர் ரூ.10 லட்சத்திற்கு மேல் எடுத்துச் சென்றால், அது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரம் வரையும் எடுத்து செல்லலாம்” என தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனை நடந்தால் அதை கண்காணிக்க வங்கி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 1,312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 321 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் சத்யபிரதா சாஹூ. தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் 702 பறக்கும் படைகளும், 702 கண்காணிப்பு குழுக்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறினார்.

**துப்பாக்கி ஒப்படைப்பு**

தேர்தலையொட்டி, உரிமத்துடன் துப்பாக்கி வைத்துள்ளவர்கள் துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைத்து வருவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

“சென்னையில் மொத்தம் 2 ஆயிரத்து 709 பேர் உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருக்கின்றனர். அவர்களில், வங்கிகளில் துப்பாக்கிகள் வைத்திருக்கும் 760 பேருக்கு மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஆயிரத்து 949 பேரில், இதுவரை 55 பேர் மட்டுமே அந்தந்த காவல்நிலையத்தில் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்” என தேர்தல் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share