வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்குவதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் பயனாளிகளின் கணக்கில் தொகையைச் செலுத்துவதற்கான முயற்சியாக வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கக்கூடிய ஏழைத் தொழிலாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்படுமென பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். இந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இந்த மாதத்துக்குள் செலுத்தப்படுமென்றும் முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் கிராமப்புற ஏழை, எளிய மக்களின் ஆதரவைப் பெற இந்த நிதியுதவித் திட்டம் பெருமளவில் பயன்படும் என்று அதிமுக அரசு எண்ணுகிறது.
முன்னதாக பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பரிசுப் பொருட்களுடன் சேர்த்து ரூ.1,000 பொது விநியோகக் கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை, எட்டு வழிச் சாலை, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக அரசுக்கு எதிரான பிரச்சாரங்களே அதிகம் இருந்துவந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கியது சாமானிய மக்களின் கவனத்தை ஈர்த்தது.
அதன் தொடர்ச்சியாகவே வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு 2,000 நிதியுதவித் திட்டத்தை முதல்வர் பட்ஜெட்டில் அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் நோக்கில் நேற்று (பிப்ரவரி 16) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2,000 ரூபாயைப் பயனாளிகளுக்கு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில், திட்ட இயக்குநர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகளைக் கண்டறிதல், குடும்ப வாரியாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட புள்ளிவிவரப் படிவத்தில் கூடுதல் விவரங்கள் சேர்த்தல் மற்றும் சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுக்குப் பிறகே இந்த 2,000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது.
ஊரகப் பகுதிகளைப் பொறுத்தவரையில் புள்ளிவிவரப் படிவங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு அச்சிடப்படுவதுடன், கூடுதல் விவரங்கள் பயனாளிகளிடமிருந்து பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளைக் கண்காணிக்க மாவட்டக் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 2,000 ரூபாய் வழங்க ரூ,1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் முதலமைச்சர் பழனிசாமி மிகவும் தீவிரமாக இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்குள் 60 லட்சம் பேருக்கும் இந்த நிதியைக் கட்டாயம் கொண்டு சேர்க்க வேண்டும் என முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அதிமுகவுக்கு மக்களிடம் நல்ல அபிப்ராயம் உருவாகும் என்று அவர் கருதுவதே, விரைந்து செயல்படுத்துவதற்குக் காரணமாக உள்ளது. பயனாளிகள் அனைவருக்கும் நிதியைக் கொண்டு சேர்க்கும் வரை முதல்வர் தொடர்ந்து இப்பணிகளைக் கண்காணிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.�,