தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ரூ.10 கோடி தருவதாக பேரம் பேசியதாக ஆளுங்கட்சி மீது விளாத்திகுளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மார்கண்டேயன் குற்றம் சாட்டியுள்ளார்.
விளாத்திகுளம் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக அந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான அதிமுக இலக்கிய அணி இணைச் செயலாளர் சின்னப்பன், மற்றும் செய்தித் தொடர்பாளர் மார்கண்டேயன் ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் சின்னப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த மார்கண்டேயன் பதவியிலிருந்து விலகி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடும் மார்கண்டேயன், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
திறந்த ஜீப்பில் சென்றபடி இன்று (ஏப்ரல் 1) வாக்கு சேகரித்த அவர், “அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக தலைமையிடம், ‘நீங்கள் மார்கண்டேயனுக்கு சீட் கொடுத்தால் நான் மாற்றுக் கட்சியினரை ஆதரிக்க வேண்டிவரும்’ என்று மிரட்டியுள்ளார். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பயத்தில் தலைமையும் என்னை கைவிட்டு எட்டி உதைத்துத் தள்ளியது. ஆனால் நான் எங்கும் விழாமல் மக்கள் மடியில் வந்து விழுந்திருக்கிறேன். மார்கண்டேயனின் வேட்புமனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென இரவு 1 மணிக்கு தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் சென்றிருக்கிறது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்யமாட்டேன் என்று அந்த அதிகாரி உறுதியாக நின்றிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “மனு தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதால் ரூ.10 கோடி பணம் தருகிறோம், தேர்தலுக்குப் பிறகு வாரியத் தலைவர் பதவி தருகிறோம், மாவட்டச் செயலாளர் பொறுப்பு தருகிறோம் என்று என்னிடம் விலைபேசிப் பார்த்தார்கள். இதனை பகிரங்கமாகவே சொல்கிறேன்” என்று ஆளுங்கட்சியை குற்றம்சாட்டிப் பேசினார்.
ஆளுங்கட்சிக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவே சுயேச்சையாக போட்டியிடுவது அதிமுகவின் வாக்குகளை கணிசமாக பிரிக்கும் என்று கூறப்படும் நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டை மார்கண்டேயன் பதிவு செய்துள்ளார்.�,