முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு மற்றும் சில்லறை விற்பனைப் பிரிவுகள் வாயிலாக நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகரித்துள்ளது.
இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் ஜியோவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில், முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தொலைத் தொடர்பு மற்றும் சில்லறை விற்பனைப் பிரிவுகள்தான் முக்கியக் காரணமாக இருக்கும் என்று கூறினார். ஆனால் அன்று அவர் கூறியதை முதலீட்டாளர்கள் பலர் நம்பவில்லை. ஆனால் அவர் அன்று கூறியது போலவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மேற்கூறிய இரண்டு துறைகள் மட்டுமே பெரும் பங்கு வகுத்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஆயில் மற்றும் சுத்திகரிப்புப் பிரிவுதான் ரிலையன்ஸுக்கு அதிக வருவாய் தரும் துறையாக இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து பெட்ரோ கெமிக்கல் துறை வாயிலாகத்தான் அதிக வருவாய் கிடைத்து வந்தது.
இந்நிலையில், 2018 ஜூலை – செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீட்டைல் ஆகிய நிறுவனங்களின் வருவாய் ரூ.44,615 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வருவாயானது இதே காலாண்டில் பெட்ரோ கெமிக்கல் பிரிவின் வருவாயை (ரூ.43,745 கோடி) விட அதிகமாகும். வருவாய் ஈட்டுவதில் முதலிடம் வகிக்கும் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவில் ரூ.98,706 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் வருவாய் 121 சதவிகிதமும், ரிலையன்ஸ் ரீட்டைலின் வருவாய் 52 சதவிகிதமும் உயர்ந்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய் ஜூலை – செப்டம்பரில் ரூ.1.56 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டின் இதே காலாண்டில் அதன் வருவாய் ரூ.1.01 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,