கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருவாயில் ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான தொகையை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
மத்திய அரசின் நிதிநிலைக் கணக்குகளை ஆராய்ந்து அதுபற்றிய விவரங்களை இந்தியப் பொதுக் கணக்காளர் அமைப்பு வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் வருவாய் விவரங்கள், செலவுகள், அரசுக்கு வழங்கிய உபரித் தொகை போன்ற விவரங்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2013-14 முதல் 2017-18 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் வருவாய் மொத்தம் ரூ.3.3 லட்சம் கோடியாக இருந்துள்ளது. அதில் சுமார் ரூ.2.48 லட்சம் கோடியை அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் வருவாயில் 75 சதவிகிதமாகும். இதற்கு முன்னர் கடைசியாக 2015-16ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி தனது வருவாயில் 83 சதவிகிதத்தை உபரியாக அரசுக்குப் பரிமாற்றம் செய்திருந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஆண்டுக்கு ரூ.65,000 கோடி மதிப்பிலான உபரித் தொகையை அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிமாற்றம் செய்து வருகிறது. 2017ஆம் ஆண்டில் மட்டுமே குறைவான தொகையை வழங்கியிருந்தது. ஏனெனில் அந்த ஆண்டில் ரிசர்வ் வங்கியின் செலவுகள் இரு மடங்கு உயர்ந்து ரூ.31,0000 கோடியாக இருந்தது. 2016-17ஆண்டுக்கு முன்பு வரை ரிசர்வ் வங்கியின் செலவுகள் ரூ.15,000 கோடிக்குக் குறைவாகவே இருந்தன. 2016ஆம் ஆண்டின் இறுதியில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் புதிய நோட்டுகளை அச்சிடுவதற்கு ரிசர்வ் வங்கி கூடுதலாகச் செலவு செய்திருந்தது.
ரிசர்வ் வங்கியிடமிருந்து அரசு அதிகமான ஈவுத் தொகையை எதிர்பார்ப்பதாகச் சென்ற மாதம் ரிசர்வ் வங்கி தரப்பில் புகார் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.�,