Oபணமதிப்பழிப்புக்குப் பிறகு விநியோகிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு ரிசர்வ் வங்கிக்குத் தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது எனவும், புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த ஓர் அறிவிப்பால் இந்தியாவே சீரழிந்த கதை அனைவரும் அறிந்து, அனுபவப்பட்டதே ஆகும். பணமதிப்பழிப்புக்குப் பிறகு விநியோகிக்கப்பட்ட புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் எவ்வளவு என்பது குறித்த விவரங்களை வழங்குமாறு ஹரிந்தர் திங்ரா என்பவர் தகவல் அறியும் உரிமை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதற்கு ரிசர்வ் வங்கி தரப்பு பதில் வழங்கத் தவறிவிட்டதாக தலைமை தகவல் ஆணையரிடம் ஹரிந்தர் திங்ரா புகாரளித்திருந்தார்.
இந்த நிலையில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் மதிப்பை அரசு நீக்கியது, புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை விநியோகித்தது பற்றிய விவரங்களை வெளியிடுமாறு ரிசர்வ் வங்கியின் கிளை நிறுவனமான ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் லிமிடெட் நிறுவனத்துக்குத் தலைமை தகவல் ஆணையர் சுதிர் பார்கவா உத்தரவிட்டுள்ளார். இதேபோல செப்டம்பர் மாதத்திலும், பணமதிப்பழிப்பால் கறுப்புப் பணத்தை மீட்பது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழி எந்த அளவுக்கு நிறைவேறியுள்ளது என்பது குறித்த விவரங்களை வெளியிடும்படி பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.�,