ராமதாஸ் வீட்டில் குருவுக்கு ஸ்லோபாய்ஸன்: தங்கை குற்றச்சாட்டு!

Published On:

| By Balaji

2011ஆம் ஆண்டில் ராமதாஸ் வீட்டில் காடுவெட்டி குருவுக்கு உணவில் ஸ்லோபாய்ஸன் கொடுத்ததாக அவர் தங்கை பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

”அப்பாவின் மரணம் இயற்கையானதல்ல, ஸ்லோபாய்சன் கொடுக்கப்பட்டது என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, குருவுக்கு செலவு செய்வது வீண், அவருக்கு எதுக்கு செலவு செய்ய வேண்டும்? இறந்தால் இறந்து போகட்டும், விட்டுவிடலாம்” என்று அன்புமணி சொன்னதாகவும், ”அன்புமணியின் வளர்ச்சிக்கு தடையாக தன் அப்பா இருப்பதாகக் கருதினார்கள். அதனால்தான் மற்ற கட்சியினருக்கு அவரை எதிரியாக மாற்றினார்கள். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அவரை எதிரியாக்கினார்கள்” என்று ராமதாஸ் மீதும், அன்புமணி ராமதாஸ் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் முன்வைத்துள்ளார்.

காடுவெட்டி குருவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தங்களது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் இன்று (மார்ச் 10) செய்தியாளர்களிடம் பேசிய காடுவெட்டி குருவின் தாய், மகன் கனலரசன் மற்றும் சகோதரி மீனாட்சி ஆகியோர் கூறியுள்ளனர். இதுகுறித்து மீனாட்சி மேலும் கூறுகையில், “கடந்த நவம்பர் மாதத்தில் எங்கள் அண்ணன் மகளைக் கடத்த திட்டமிட்டனர். அதனால் அவசரமாக அழைத்துச் சென்று திருமணம் நடத்தி வைத்தோம். திருமணத்துக்குப் பிறகு எங்கள் ஊருக்குள் விடாமல் எங்களை அடித்து துரத்தினர். எங்களை வீடு புகுந்து அடிப்பதற்கு மீண்டும் திட்டம் போட்டிருக்கிறார்கள். நேரடியாக இதெல்லாம் செய்துவிட்டு, மறைமுகமாக உறவினர்களை அனுப்பி பேரம் பேசுகிறார்கள்” என்றார்.

கனலரசன் கூறுகையில், “எனக்குதான் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்றால் என்னுடைய சமுதாயத்திற்கும் அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று என் அப்பா கண் கலங்கினார். அதன் வெளிப்பாடாகத்தான் மாவீரன் ஜெ குரு வன்னியர் சங்கம் ஆரம்பித்திருக்கிறோம். அதிமுக கூட்டணிக்கு போயிருக்கிற பாமக 10 கோரிக்கைகளை வைத்திருக்கிறது. அதில் ஒரு கோரிக்கையாவது எங்கள் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக இருக்கிறதா? இடஒதுக்கீடு போராட்டத்தில் 25 தியாகிகள் உயிரிழந்தார்கள். அவர்களுக்கு மாத ஊதியமாக 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதை ரூ.10,000ஆக உயர்த்தக்கூடாதா? அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடாதா? இதையெல்லாம் ஒரு கோரிக்கையாக ஏன் பாமக வைக்கவில்லை? மாற்றம், முன்னேற்றம் என்று அன்புமணி அவர்கள் பேசினார். இப்போது பணத்துக்காக எல்லாவற்றையும் சீர்குலைத்துவிட்டார்கள்” என்றார்.

பாமக 90 விழுக்காடு அவர்களை அவர்களே அழித்துக்கொண்டதாகவும், மீதி 10 விழுக்காட்டை ஜெ குரு வன்னியர் சங்கத்தின் மஞ்சள் படை புரட்சி செய்து அழிக்கும் என்றும், அது வரும் தேர்தலில் பாமகவுக்கு தெரியும் என்றும் கூறிய கனலரசன், “காடுவெட்டியார் இல்லாமல் பாமக இல்லை. பாமக இல்லாமல் காடுவெட்டியாரும் இல்லை என்பது உண்மைதான். வன்னியர் கல்விக்கோயிலில் ஒரு பைசா கூட பணம் வாங்காமல் வன்னியர் மக்களுக்கு கல்வி கொடுப்போம், வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவோம் என்றார்கள். ஆனால் வன்னியர் கல்விக் கோயில் இன்றைக்கு சரஸ்வதி பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டிருக்கிறது. படிக்க பணம் வாங்கப்படுகிறது” என்றும் பாமக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

காடுவெட்டி குரு உயிரோடு இருந்தபோதே உள்ளுக்குள் பனிப்போர் நிலவியதாகவும், அது வெளியில் யாருக்கும் தெரியாது எனவும் கூறிய மீனாட்சி, “2011க்குப் பிறகு அவர் அரசியலில் எவ்வளவு ஈடுபாட்டோடு இருந்தார் என்பதை நீங்கள் பார்த்தாலே தெரியும். அவர் மீது கட்சியில் அதிகாரம் செலுத்தப்பட்டது. அவரது மரணம் இயற்கையானது அல்ல. ஸ்லோபாய்ஸன் கொடுத்து மருத்துவக் கொலை செய்திருக்கிறார்கள். 2011ஆம் ஆண்டில் ராமதாஸ் வீட்டில் ஒரு பார்ட்டி வைத்திருந்தார்கள். அந்த பார்ட்டிக்கு சென்று எங்கள் அண்ணன் சாப்பிட்டார். சாப்பிட்டு வந்தவுடன், அவர் மனைவி சாப்பிடும்போது எனக்கு மட்டும் ஏதோ வைத்தார், வேறு யாருக்கும் அதை வைக்கவில்லை, அதைச் சாப்பிட்ட பிறகு எனக்கு நெஞ்சு எரிய ஆரம்பித்துவிட்டது என்று அண்ணன் கூறினார். அதிலிருந்துதான் எங்கள் அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது” என்றது பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மாவீரன் குரு வன்னியர் பேரவையின் நிலைப்பாடு குறித்து கனலரசனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பாமகவுக்கு எதிராக நாங்கள் கண்டிப்பாக வேலை செய்வோம். பாமக போட்டியிடும் 7 தொகுதிகளிலும் மஞ்சள் படை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. பாமகவை வீழ்த்துவதற்கான அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் கோரிக்கையையும், நிபந்தனையையும் ஏற்கும் கட்சியை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்றார். காடுவெட்டி குரு மருத்துவமனையில் இருந்தபோதே தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மருத்துவச் செலவுக்குப் பணம் கொடுத்ததாகவும், அவர் தற்போது ஆதரவு கேட்டால் அவருக்கு ஆதரவளிப்போம் எனவும் மீனாட்சி தெரிவித்தார்.

மேலும், “பாமகவை வன்னியர்கள் முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்பது உண்மையல்ல. வன்னியர்கள் அனைத்து கட்சியிலும் இருக்கிறார்கள். வன்னியர்கள் பாமகவுக்கு இந்தத் தேர்தலில் நல்ல பதில் சொல்லுவார்கள்” என்றும் கனலரசன் கூறினார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share