பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேராவின் ரூ.4.62 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
லண்டனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துகள் வாங்கிய விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், கிழக்கு உபி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் ராபர்ட் வதேரா விசாரணைக்காக அமலாக்கத் துறையில் ஆஜராகி வருகிறார்.
இதற்கிடையில் அவர் மீது, ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் குறைவான விலையில் நிலங்களை வாங்கி அதைப் போலியான ஆவணங்கள் மூலம் அதிக விலைக்கு விற்றதாகவும் அவர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இதுதொடர்பான வழக்கில் வதேராவும், அவரது தாயும் நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி கடந்த செவ்வாய் அன்று, ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருவரும் ஆஜராகினர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வதேரா, “கடந்த நான்கரை ஆண்டுகளாக எதும் செய்யாமல், விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் என்னை விசாரணைக்காக அழைப்பது வெறும் அரசியல் தான். இது பாஜகவின் தேர்தல் வித்தை” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், 75 வயதாகும் எனது தாயை விசாரணைக்காக அழைத்திருப்பது இந்த அரசின் மிக மோசமான பழிவாங்கும் அரசியலையே காட்டுகிறது.” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 15) வதேராவுக்கு சொந்தமான, 18,59,500 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளையும், அசையா சொத்தான டெல்லியில் உள்ள 4,43,36,550 ரூபாய் மதிப்பிலான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்தையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில், வதேரா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிரியங்கா ”ராபர்ட் வதேரா மீதான விசாரணை ஓயாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் நான் எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,