ராதாபுரம் தொகுதிக்கான மறுவாக்கு எண்ணிக்கை நேற்று இரவே நடந்து முடிந்துவிட்டாலும், உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் அதன் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் 23ஆம் தேதிக்கு பின்னரே வெளியாகவுள்ளன. ஆனால், அதற்கு முன்பே முடிவுகளை சொல்லாமல் சொல்லிவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (அக்டோபர் 5) அமமுகவினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், இன்பதுரை தற்போது துன்பதுரையாக மாறிவிட்டதாக சாடினார். “வாட்ஸ் அப், ட்விட்டரில் பார்த்தால் அப்பாவுதான் வெற்றிபெற்றார் என செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இதனை யாரும் மறுக்கவில்லை” என்று குறிப்பிட்ட ஸ்டாலின், விக்கிரவாண்டி – நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளுடன் ராதாபுரம் தொகுதியையும் சேர்த்து 3 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக கூட்டணி சார்பில் சட்டப்பேரவைக்கு வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இது நீதிமன்ற அவமதிப்பு என்று அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
நாங்குநேரியில் இதுதொடர்பாக பேட்டியளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “ராதாபுரம் தொகுதி வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டாலும் கூட அதனை வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறான சூழலில், மறுவாக்கு எண்ணிக்கை குறித்த உண்மை நிலை என்பது யாருக்கும் தெரியாது. ஸ்டாலினுக்கு மட்டும் இது எப்படி தெரிந்தது. ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் நீதிமன்றத்தின் உத்தரவையே எள்ளி நகையாடக் கூடிய வகையில் பேசியிருக்கிறார். அவர் எவ்வாறு மக்களை காப்பாற்றுவார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
துன்பதுரை என ஸ்டாலின் விமர்சித்ததற்கு பதிலளித்துள்ள ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை, “இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார் என்று எனது தமிழ் பெயரை கிண்டலடித்திருக்கிறார் ஸ்டாலின். தமிழின தலைவர் என தன்னை அழைத்துக்கொண்டு மகனுக்கு ஸ்டாலின் என பெயரிட்ட உங்கள் தந்தைக்கு முன்பாக, இன்பதுரை என்று அழகு தமிழ் பெயர் சூட்டி மகிழ்ந்த என் தந்தையின் தமிழ்பற்றே உயர்ந்து நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
�,