தேர்தலின்போது ராணுவ வீரர்களின் படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்துக்காக ராணுவ வீரர்களின் படத்தையோ, ராணுவ உடைகளையோ அரசியல் கட்சிகள் பயன்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்க வேண்டுமென முன்னாள் கடற்படை தலைமை அதிகாரி எல்.ராம்தாஸ் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு நேற்று (மார்ச் 9) கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் தேர்தல் பரப்புரை விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படத்தைப் பயன்படுத்தக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக 2013ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி போடப்பட்ட உத்தரவை தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் மீண்டும் நேற்று (மார்ச் 9) பகிர்ந்துள்ளது. அதில், ‘தேர்தல் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளில் தேர்தல் கட்சிகள் ராணுவ தலைமை அதிகாரிகள் அல்லது வீரர்களின் படங்கள் மற்றும் ராணுவ விழாக்களின் படங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இதை அனைத்துக் கட்சியினரும், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிடிபட்டு இந்தியா திரும்பிய விமானப் படை வீரர் அபிநந்தனின் புகைப்படங்களை அண்மையில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விளம்பரப் பதாகைகளில் பயன்படுத்திய சம்பவம் நிகழ்ந்தது. இதுபோன்ற செயல்கள் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக உள்ளதால், இத்தகைய செயல்கள் தேர்தல் சமயத்தில் அதிகரித்துவிடாமல் இருக்கும் வண்ணம் இந்த உத்தரவைத் தேர்தல் ஆணையம் மீண்டும் அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பியுள்ளது.�,”