ராஜ்யசபா ரேஸ்: திமுக, அதிமுகவின் சாதி மதக் கணக்கு!

public

தமிழகத்தில் மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து திமுக, அதிமுக என இரு கட்சிகளிலும் தலா 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் டெல்லிக்கு அனுப்பப்பட உள்ளனர். யார் யாருக்கு அந்த வாய்ப்பு என்று இரு கட்சிகளிலுமே பலத்த போட்டி இருக்கிறது.

**அதிமுக**

தற்போது பதவிக் காலம் முடிவடையும் 6 எம்பிக்களில் 5 பேரை அதிமுகதான் அனுப்பியிருந்தது. ஆனால் இப்போது 3 பேரை மட்டுமே அனுப்பும் வாய்ப்பே அதிமுகவுக்குக் கிடைத்திருக்கிறது. [அதிமுகவில் நடக்கும் ராஜ்யசபா ரேஸ்](https://minnambalam.com/politics/2020/02/19/19/rajyasaba-election-admk-race) குறித்து, ஏற்கனவே மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, ஏசி சண்முகம் ஆகியோர் இந்தப் போட்டியில் தீவிரமாக இருப்பதாக அந்த செய்தியில் தெரிவித்திருந்தோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் டெல்லியில் தங்களுக்கு ஒரு பிடிமானம் வேண்டும் என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி தம்பிதுரையையும், ஓ,.பன்னீர் செல்வம் கேபி முனுசாமியையும் டெல்லிக்கு அனுப்ப தீவிரமாகியிருக்கிறார்கள்.

ஆனால் எம்பி தேர்தலில் நின்று தோற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பா என்ற குரலும் அதிமுகவில் கேட்கிறது. மேலும் அது மேலவை என்பதால் சீனியர்களை மட்டுமே அனுப்பும் மரபு இருக்கிறது. அதை பகுதியாக உடைத்து சீனியர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் அதுதான் கட்சியை உயிர்ப்பாக வைத்திருக்கும் என்ற கோரிக்கையும் அதிமுகவில் ஒலித்து வருகிறது. இந்த வகையில் அண்மையில் காலமான பிஹெச் பாண்டியனின் இளைய மகனான அரவிந்த் பாண்டியன் ராஜ்யசபா கோரிக்கையை ஓபிஎஸ்ஸிடம் வைத்திருக்கிறார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி சௌந்தரராஜனும் ராஜ்யசபாவுக்காக காய் நகர்த்தி வருகிறார். முன்னாள் அமைச்சர் சிவபதி, நத்தம் விசுவநாதன் போன்றோரும் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

வன்னியர், முத்தரையர், நாடார் என்ற சாதிச் சமன்பாடுகளோடு இந்த மூன்று வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கையும் அதிமுகவின் மேலிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது, அதேநேரம் முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் எம்பியுமான அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன் ஆகியோரும் இதுதான் சிறுபான்மையினர் மீதான அதிமுகவின் அக்கறையைக் காட்ட சரியான நேரம் என்ற வாதத்தோடு ராஜ்யசபா ரேஸில் ஓடுகிறார்கள்.

அதிமுகவுக்கு கிடைக்கும் 3 இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனுக்கு ஒரு இடம் வேண்டும் என்று கட்சி கடுமையாக லாபி செய்து வருகிறது. அண்மையில் ஆதித்தனார் மணி மண்டப விழா, தஞ்சை வைத்திலிங்கம் திருமண விழா போன்ற விழாக்களில் முதல்வரோடு அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் ஜிகே வாசன். இந்த நெருக்கம் ராஜ்யசபா சீட் பங்கீட்டில் இருக்குமா என்ற விவாதமும் அதிமுகவுக்குள் நிலவுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்க ஆரம்பித்துவிட்டதால், கிடைக்கும் அனைத்து இடங்களிலும் அதிமுகவினரையே நிரப்ப வேண்டும் என்ற விருப்பம் எடப்பாடிக்கு இருக்கிறது. அதை சாமர்த்தியமாக முறியடிக்க வாசன் காய் நகர்த்தி வருகிறார் என்று டெல்லி வரை பேசுகிறார்கள். தேமுதிகவுக்கு ஒரு எம்பி வேண்டுமென்று அக்கட்சியும் வெளிப்படையாகவே வலியுறுத்தி வருகிறது. தலைமைதான் முடிவெடுக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டே பதிலும் சொல்லிவிட்டார்.

**திமுக**

திமுகவுக்குக் கிடைக்கும் 3 இடங்களில் ஒன்று அக்கட்சியின் சட்ட ஆலோசகரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவுக்கு என்பது ஏற்கனவே ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி. இதற்கு முன் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட்டபோது அவரது வேட்பு மனு ஏற்கப்படுமா என்ற சர்ச்சை நிலவியபோது, ‘பாதுகாப்பு’ வேட்பாளராக மனு செய்தார் என்.ஆர். இளங்கோ. வைகோவின் வேட்பு மனு ஏற்கப்பட்டதால் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதற்காகவே அடுத்த முறை இளங்கோவுக்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லியிருந்தார் ஸ்டாலின்.

எனவே அடுத்த இரண்டு இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. திருச்சி சிவா மீண்டும் தனது டெல்லி பயணத்தைத் தொடர கடுமையான முயற்சி செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டு காலம் கட்சியினருக்கு என்ன செய்தார் என்று கேள்வி கேட்டு, மீண்டும் அவருக்கு கொடுக்க கூடாது என்று முதன்மைச் செயலாளர் நேருவை திருச்சியில் இருந்தே பலர் வற்புறுத்தி வருகிறார்கள். தகவல் தொழில் நுட்பத்துறையின் மாநில துணைச் செயலாளர் புதுக்கோட்டை அப்துல்லா, இளைஞரணி அசன் முகமது ஜின்னா ஆகியோர் சிறுபான்மையினர் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்கள். இவர்களில் அப்துல்லாவே முன்னால் நிற்கிறார்.

திமுகவிலும் முத்தரையர் சமுதாய லாபி வேலை செய்து வருகிறது. காலஞ்சென்ற செல்வராஜோடு இருந்தவரும் அதன் பின் நேருவின் இரும்பு ஆதரவாளராக மாறிவிட்ட திருச்சி அந்தநல்லூர் பிச்சமுத்துவும் ராஜய்சபாவுக்காக முயற்சித்து வருகிறார். கனிமொழி ஆதரவாளரான விழுப்புரம் வழக்கறிஞர் செல்வநாயகமும் முயற்சியில் இருக்கிறார்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *