ராஜகோபால் தண்டனை: ஜெ.வுக்கு நன்றி சொன்ன ஜீவஜோதி

Published On:

| By Balaji

சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக ஜீவஜோதி கூறியுள்ளார்.

சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை நேற்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

ராஜகோபாலுக்கு கிடைத்த தண்டனை குறித்து நேற்று(மார்ச் 29)ஜீவஜோதி தாயார் தவமணி கூறுகையில், “எல்லாவற்றையும் மறந்துவிட்டு இப்போதுதான் ஜீவஜோதி நிம்மதியாக வாழ்கிறாள். தீர்ப்பு குறித்து ஜீவஜோதிதான் கருத்து சொல்லணும். தீர்ப்பின் காரணமாகத்தான் கடைக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.

இந்நிலையில், ஜீவஜோதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டுமல்ல மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜகோபால் என்னை கொடுமை செய்தபோது ஜெயலலிதா வீட்டிற்கு சென்று இதுகுறித்த விவரங்களை கூறினேன். ஆட்சியில் இல்லையென்றாலும், இதில் எனக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் ஆனார். இப்போதுமட்டும் ஜெயலலிதா உயிரோடிருந்தால் அவரை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருப்பேன். இந்த வழக்கில் போலீசார் தீவிரமாக புலன்விசாரணை செய்தனர். சரியான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்த போலீசாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும், இறுதியில் நீதி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறினார்.

சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட பிறகு 2006ஆம் ஆண்டு தண்டபாணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்த ஜீவஜோதி தஞ்சாவூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாடுகளுக்கு ஊறுகாய், அப்பளம் ஏற்றுமதி செய்யும் தொழிலை செய்து வருகிறார். ஜீவஜோதி தையல் கடை மற்றும் ஹோட்டல் நடத்தி வருகிறார. இவர்களுக்கு பிரவீன் கிஷோர் என்ற மகன் உண்டு.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share