வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடவுள்ளார். தென்மாநிலங்களிலிருந்து மற்றொரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஏ.கே.ஆண்டனி நேற்று (மார்ச் 31) செய்தியாளர்களிடம் பேசுகையில், “தென்னிந்தியாவில் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டுமென கடந்த சில வாரங்களாகத் தொடர் கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. முக்கியமாக கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்தே கோரிக்கைகள் எழுந்தன.
தென்மாநிலங்களின் ஒருமித்த கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது என நாங்கள் அனைவரும் ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்தோம். பின்னர் வயநாடு தொகுதியில் போட்டியிட அவர் ஒப்புதல் அளித்தார்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், அமேதி தொகுதியிலும், வயநாடு தொகுதியிலும் பாஜக அமோக வெற்றிபெறும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.�,