புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “வரும் மக்களவைத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரான பிறகு, தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத, ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப சட்டமன்ற தேர்தல் நடைபெறும். அத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராவார். இதற்குத்தான் தமிழக மக்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
ஆக, திமுக கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுக்கும் தயாராக வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து வந்த நரேந்திர மோடி, கடந்த பொதுத் தேர்தலில் மக்களை ஏமாற்றி பிரதமரானார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றை அமல்படுத்தி நாட்டையே நாசம் செய்துவிட்டார். மதவெறி கொண்ட மோடி மதங்களின் பெயரால் நாட்டை துண்டுபோட நினைக்கிறார். இந்தியாவில் இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, ஜிஎஸ்டியால் பல லட்சம் பேர் வேலையிழக்க மோடி காரணமாகிவிட்டார்.
முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பார்த்து, இவற்றை எப்படி செயல்படுத்த முடியும் என பாஜக கேள்வியெழுப்பியது. இப்போது, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் எப்படி ரூ.72,000 வழங்க முடியும் என கேட்கிறார்கள். செய்ய முடியாததை நானும், காங்கிரஸும் எப்போதும் சொல்லமாட்டோம். சொல்லியதை பாஜக போல செய்யாமல் இருக்கமாட்டோம். நிச்சயமாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தபிறகு வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும். அதை காங்கிரஸ் அரசு செய்துகாட்டும்” என்று பேசினார்.�,