ராகுல் கொடுத்த 13 தொகுதிப் பட்டியல்: திமுக -காங்கிரஸ் பேச்சுவார்த்தை!

Published On:

| By Balaji

திமுக கூட்டணியில் முதலில் கையெழுத்திட்டு பத்து தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி , எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றிய பேச்சுவார்த்தையை திமுகவோடு இன்று (மார்ச் 9) தொடங்கியிருக்கிறது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “காங்கிரஸ் சார்பில் தொகுதிப் பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்ட பின் நாளை பேச்சுவார்த்தை நடக்கும்” என்று சொல்லியிருந்தார்.

அதன்படியே நேற்று மாலை காங்கிரஸ் கட்சி அமைத்த குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இன்று காலை 11 மணியளவில் திமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .

காங்கிரஸ் போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய ராகுல் காந்தி, அதன் பின் டெல்லியில் திமுக எம்.பி. கனிமொழியுடன் பேச்சு நடத்தி பத்து தொகுதிகள் என்று முடிவு செய்தார். அதன் பின் காங்கிரஸ் குழுவினர் அறிவாலயம் சென்று பிப்ரவரி 20 ஆம் தேதி திமுகவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து மட்டுமே போட்டு வந்தனர்.

இந்நிலையில் இதேபோல அந்த பத்து தொகுதிகள் எது என்பதையும் ராகுல் காந்தி ஏற்கனவே காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுத்துவிட்டார். 13 தொகுதிகளை ராகுல் காந்தி எழுதி அதில் 10 தொகுதிகளைக் குறிப்பிட்டு ஒரு பட்டியல் தயார் செய்திருக்கிறார். அது சீலிடப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கவரை தான் இன்று திமுக குழுவிடம் கொண்டு சேர்ப்பித்திருக்கிறார்கள் காங்கிரஸ் குழுவினர். ராகுல் காந்தி அளித்த 13 தொகுதிகளில் தமிழ்நாட்டின் ஒன்பது தொகுதிகளை தேர்வு செய்வது பற்றித்தான் இப்போது முதல் கட்ட விவாதம் நடந்திருக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில். புதுச்சேரி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ராகுல் கொடுத்த பட்டியலில் கன்னியாகுமரி, தென்காசி,நெல்லை, சிவகங்கை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, ஆரணி, தென்சென்னை, ஈரோடு உள்ளிட்ட தொகுதிகள் இருக்கலாம் என்று தெரிகிறது.

பேச்சுவார்த்தை முடிந்து அறிவாலய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “எங்களுக்குத் தேவையான தொகுதிகளைப் பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறோம். 10 தொகுதிகளில் இருக்கும் சாதக பாதகங்களைப் பற்றி நாங்களும் சொன்னோம். அவர்களும் சொன்னார்கள். மற்ற கட்சிகளோடும் பேசி இன்னும் சில நாட்களில் இறுதி முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share