ரஃபேல் விவகாரத்தில் மோடியை திருடர் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாகக் காங்கிரஸ் தலைவர் கூறியது தொடர்பாக அவருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரஃபேல் விவகாரத்தில் மறு சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று ஏப்ரல் 10ஆம் தேதி நீதிபதிகள் கூறியதையடுத்து, மோடியை திருடர் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது என ராகுல் காந்தி அமேதியில் கூறியிருந்தார். இதுதொடர்பாக பாஜகவைச் சேர்ந்த டெல்லி எம்பி மீனாட்சி லெகி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் உரிய பதிலளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், “உச்சநீதிமன்ற உத்தரவு வந்தபோது பிரச்சாரத்தில் இருந்த சமயத்தில் பேசிவிட்டேன். ஆனால், தீர்ப்பின் சாராம்சம் தெரியாமல் பேசிய என்னுடைய வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டன. நீதிமன்றத்தின் உத்தரவுகளை, மாண்புகளை மதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை” என்று ராகுல் காந்தி பதிலளித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடந்தது. ராகுல் காந்தி தனது அறிக்கையில் எங்கும் மன்னிப்பு கேட்கவில்லை என்று மீனாட்சி லெகியின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்ஜி நீதிபதிகளிடம் கூறினார். இதைக்கேட்ட தலைமை நீதிபதி, நாங்கள் ராகுல் காந்தி தாக்கல் செய்த அறிக்கையைப் படிக்கவில்லை, என்ன சொல்லியிருக்கிறார் என்று நீங்களே சொல்லுங்கள் என்றார்.
“ராகுல் காந்தி சமர்ப்பித்துள்ள அறிக்கையில் எங்கும் மன்னிப்பு கேட்கவில்லை. நீதிமன்ற உத்தரவுகளைத்தான் அவரது அறிக்கையில் அளித்துள்ளார். நீதிமன்ற உத்தரவைப் படித்து அந்தக் கருத்தைக் கூறவில்லை என்றும், ஒரு மகிழ்ச்சிகரமான மனநிலையில் அதைத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அதற்காக அவர் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்கவில்லை” என்று ரோகத்ஜி கூறினார்.
இதற்கு ராகுல் காந்தியின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, “சவுகிதார் சோர்ஹை (காவலாளியே திருடன்) பிரச்சாரத்தை நீதிமன்ற உத்தரவோடு தவறாக இணைத்துப் பயன்படுத்தியதற்காக அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்” என்றார். மேலும், ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியதாகப் பிரதமர் மோடி கூறியதையும் சிங்வி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசினார்.
ஒரு முக்கியக் கட்சியின் தலைவர் நீதிமன்றத்தின் உத்தரவைப் படிக்காமல் நரேந்திர மோடியை திருடர் என்று கூறுகிறார் என்று ரோகத்ஜி குற்றம்சாட்டினார். மேலும் மனுதாரர் மீனாட்சி லெகி தொடர்ந்த வழக்கில் அவமதிப்பு வழக்கு தொடர்பாக இன்னமும் நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றும் அவர் கூறினார். இதையடுத்து ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்தனர். ஏப்ரல் 30ஆம் தேதி விசாரணைக்கு வரும் ரஃபேல் வழக்குடன் இதையும் சேர்த்து பட்டியலிடுமாறு உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
�,