ராகுல் கல்லூரி விசிட்: விசாரணைக்கு அரசு உத்தரவு!

Published On:

| By Balaji

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி கலந்துகொண்ட நிகழ்வுக்கு அனுமதியளிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க தமிழக கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி உத்தரவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் மார்ச் 13ஆம் தேதி தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னையிலுள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்த நிகழ்வில் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் கல்லூரி நிகழ்வில் ராகுல் காந்தி பங்கேற்றது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககத்தின் இயக்குனர் சாருமதி, சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், “சென்னை-86 ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் 13.03.2019 அன்று நடைபெற்ற மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர் பங்கேற்றதாக பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில் எவ்வாறு இந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்ற விவரத்தினை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு இவ்வலுவலகத்துக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் ‘மிக அவசரம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் நிர்வாகிகளை தொடர்புகொண்டபோது, “3 மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ராகுல் காந்தியின் கல்லூரி நிகழ்வானது, அரசு தரப்பிலிருந்து கல்லூரி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு ரத்து செய்யவைக்கப்படலாம் என்பதற்காக கடைசி நேரம் வரை ரகசியமாகவே வைக்கப்பட்டது. கல்லூரியில் ராகுலுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து எரிச்சலடைந்த பாஜக அரசு, தமிழக அரசின் மூலமாக ராகுல் வருகை குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுவிட்டது. மேலும், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி தன்னாட்சிக் கல்லூரி என்பதால் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முன்கூட்டியே அனுமதி வாங்கத் தேவையில்லை” என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் தொலைபேசியில் விசாரித்தபோது, “கல்லூரி முதல்வர், செயலாளர் இருவரும் தற்போது வெளியில் ஒரு கூட்டத்திற்காக சென்றுள்ளனர். அவர்கள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்” என்று முடித்துக்கொண்டனர்.

**தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம்**

இதற்கு விளக்கம் அளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “ராகுல் காந்தி நிகழ்வு முன்பே திட்டமிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் அழைப்பு விடுக்காமல் எம்.பி என்ற முறையிலேயே அழைப்பு விடுத்தனர். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு அனுப்பிய நோட்டீஸை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்” என்றுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share