ரவுடிக் கும்பல் செயல்பாடுகள்: நீதிபதிகள் கேள்வி!

Published On:

| By Balaji

தமிழகத்தில் ரவுடிக் கும்பல்களின் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், குற்ற நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏன் கொண்டுவரக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் இரண்டு ரவுடிக் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி லோகேஷ் கும்பலைச் சேர்ந்தவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து, வேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நேற்று (நவம்பர் 14) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பாஸ்கரன் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ரவுடிக் கும்பல்கள் தீவிரமாக இருப்பதாகவும், இக்கும்பல்கள் கொலை, கொள்ளை, கடத்தலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பீதியில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தது உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு.

ரவுடிக் கும்பல்களையும் கூலிப்படையினரையும் ஒழித்துவிட்டால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாது எனத் தெரிவித்த நீதிபதிகள், தமிழக டிஜிபியையும் மத்திய உள் துறைச் செயலாளரையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்துள்ளனர்.

“தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் எத்தனை ரவுடிக் கும்பல்கள் தீவிரமாக உள்ளன?

இக்கும்பல்கள் எத்தனை குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளன? அப்பாவிகளின் சொத்துகளை அபகரிக்க, ரியல் எஸ்டேட் துறையினர் ரவுடிக் கும்பல்களை ஈடுபடுத்துகின்றனரா? எந்தெந்த அரசியல் கட்சிகள் குற்றப் பின்னணி கொண்டவர்களை நிர்வாகிகளாக நியமித்துள்ளன?

காவல் துறையினரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக ரவுடிகள் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனரா? ரவுடிகள் வெளிமாநிலங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளில் இருந்து பட்டங்களை வாங்குகின்றனரா? காவல் துறை உயர் அதிகாரிகள் ரவுடிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களா? ரவுடிகளுக்கு மத அமைப்புகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகளின் ஆதரவு உள்ளதா?

இந்த ரவுடிக் கும்பல்களில் இளைஞர்கள் சேர்வதற்கு சமூகப் பொருளாதாரப் பின்னணி ஏதும் உள்ளதா? ரவுடிகளுடன் சேர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களைச் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? ரவுடிக் கும்பல்களுடன் சிறார்கள் சேர்வதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ரவுடிகளைக் கட்டுப்படுத்த டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் ஏன் சிறப்புப் பிரிவு தொடங்கக் கூடாது? மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களைப் போல தமிழகத்தில் திட்டமிட்ட குற்ற நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தைத் தமிழக அரசு ஏன் கொண்டுவரக் கூடாது? பிற மாநில ரவுடிகளும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதால், இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு ஏன் கொண்டுவரக்கூடாது?” என்று பல கேள்விகளை எழுப்பினர் நீதிபதிகள்.

வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள், இக்கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு தமிழக டிஜிபிக்கும், மத்திய உள் துறைச் செயலாளருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share