ரவிக்குமாருக்குப் பாதுகாப்பு வழங்க ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published On:

| By Balaji

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமாருக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் உள்ள கொலைப்பட்டியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமாரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக மத்திய உளவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குப் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில்,“மாற்றுச் சித்தாந்தம் கொண்டோரின் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஜனநாயக ரீதியாகக் கருத்துக்குக் கருத்து என்ற பண்பட்ட முறையில் பதில் சொல்ல முடியாத தேச விரோதிகள், அங்கொருவர் இங்கொருவர் எனத் தலைதூக்கி, அவர்கள் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமாருக்குக் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது.

ஆக்கபூர்வமாகக் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் அபாயகரமான போக்கு தமிழகத்தில் குறிப்பாக அதிமுக ஆட்சியில் அதிகரித்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்து, ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்பைத் தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும், இதுபோன்ற தீவிரவாத வன்முறையில் ஈடுபட நினைக்கும் வெறியர்களைச் சட்டத்தின் துணைகொண்டு முளையிலேயே கிள்ளியெறிந்து, சமூகத்தில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் வளர்த்தெடுத்திட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share